இந்திய அணி 2011 உலக கோப்பை தொடருக்கு பின் பல மாற்றங்களை அணியில் கண்டது. மூத்த வீரர்கள் பலர் ஓய்வினை அறிவித்தனர். சிலர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணி 2015 உலகக்கோப்பை தொடரை எதிர் கொண்டது. 2011 உலககோப்பை அணியிலிருந்த ஒருசில வீரர்கள் மட்டுமே 2015 உலகக்கோப்பை அணியில் இருந்தனர். லீக் போட்டிகளில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் இந்திய அணி அணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து பார்ப்பதற்கு பலமான அணியாக தெரிந்தாலும் சில ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. அத்தகைய மூன்று ஒருநாள் தொடர்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#1) 2015 வங்கதேசம் – இந்தியா ஒருநாள் தொடர்
இந்திய அணி 2015 உலககோப்பை தொடருக்கு பின் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. உலககோப்பை விளையாடிய அதே அணியே இந்த தொடரிலும் பங்கேற்றது. தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 307 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியோ 228 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்நிலையில் கட்டாயம் வெற்றி பெற வேண்டி இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 35 ஓவரிலேயே இலக்கை எட்டியது. 54 பந்துகளை மிச்சம் வைத்து போட்டியை வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இந்திய அணி உலககோப்பையை தொடர்ந்து இந்த தொடரையும் இழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றம் அளித்தது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
#2) 2017 சாம்பியன்ஸ் டிராபி
இந்திய அணி 2017 ஆம் ஆண்டில் அணியில் பல மாற்றங்களைக் கண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி பல முன்னணி வீரர்களுடன் களமிறங்கியது. லீக் சுற்றில் இலங்கை அணியுடன் மட்டும் தோல்வியடைந்த இந்திய அணி மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டிருந்தது. அரையிறுதி போட்டியில் வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதியானது இந்திய அணி. இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஏற்கனவே இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவித்தது. 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணி சொதப்பியது. எந்தவொரு பேட்ஸ்மேனும் நிலைத்து ஆடவில்லை. இறுதியில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது இன்றளவும் இந்திய அணியின் பெரிய தோல்வியாகவே கருதப்படுகிறது.
#1) 2019 இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணி 10 ஒருநாள் தொடர்களில் வெற்றி கண்டிருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை மட்டும் இழந்திருந்தது. இருந்தபோதிலும் தொன்னாப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என அனைத்து நாட்டிற்கும் சென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. டி20 தொடரை 2-0 என இந்திய அணி இழந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருந்தது இந்திய அணி. அடுத்த 3 போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலும் இந்திய அணி தொடரைக் கைப்பற்றிருக்கக்கூடும். இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும் எனவே அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தொடரிலும் மிடில் ஆர்டர் பிரச்சினை காரணமாக இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. உலககோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் இதுவே. இதில் இந்திய அணி தோல்வியடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதேபோல் உலககோப்பை தொடரிலும் இந்திய அணி சொதப்பி விடுமோ என்ற அச்சத்தில் தற்போது இந்திய அணி உள்ளது. விராத்கோலி கேப்டனாகிய பின் இந்திய அணி இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை இழப்பது இதுவே முதல்முறை.