#2 முகமது அமீர்
பாகிஸ்தான் அணி எப்பொழுதும் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை தன்னிடத்தில் கொண்டிருக்கும். வாஷீம் அக்ரம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோரை இதற்கு சான்றாக நாம் கூறலாம். இந்த வரிசையில் தற்காலத்தில் பாகிஸ்தான் அணியில் வலம் வந்தவர் முகமது அமீர். இவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஷீம் அக்ரமினால் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவர் ஆவார். இதன்மூலம் 19-வயதிற்கு உட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டதால் 2009ல் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். இத்தொடரில் பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் முகமது அமீர் பங்கேற்றிருந்தார். 2009 டி20 உலகக்கோப்பையையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. இவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இப்போட்டியில் முகமது அமீர் இலங்கை அணியின் மிகப்பெரிய பேட்டிங் ஜாம்பவான்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதே ஆட்டத்திறனை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் முகமது அமீர் வெளிபடுத்தினார். 2010ல் இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பௌலர் முகமது அமீர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இவர் சூதாட்ட புகாரில் சிக்கிய காரணத்தால் 5 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார். 5வருட தடைக்குப் பின்னர் 2016ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வந்தார். இந்த சமயத்தில் தன்னை சிறந்த வீரராக நிறுபிக்கும் வேண்டும் என்ற கட்டாயத்தில் முகமது அமீர் இருந்தார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தலா இரு டெஸ்ட் போட்டிகளில் முகமது அமீர் பங்கேற்றார். முகமது அமீரின் சொந்த காரணங்களுக்காக தனது 27 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் மொத்தமாக 30.40 சராசரியுடன் 119 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.