கடந்த நான்கு ஆண்டுகளாக ஐசிசியால் நடத்தப்பட்ட நான்கு தொடர்களை தொடர்ச்சியாக தோற்றுள்ளது, இந்திய அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோ உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறது, பிசிசிஐ. இது மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக பணியாளர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் மேலும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், இம்மாதம் நடைபெறவுள்ள நேர்காணலில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அனில் கும்ப்ளே, ரவிசாஸ்திரி, ராபின் சிங், ராஜ்புத், டாம் மூடி, மஹேலா ஜெயவர்த்தனே, கேரி கிறிஸ்டன், மைக்கேல் ஹஸன் மற்றும் ஸ்டீபன் பிளமிங் போன்ற பல்வேறு ஜாம்பவான்கள் இதுவரை இந்த பெருமை மிகுந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்னர், ரவி சாஸ்திரி, டாம் மூடி, ராபின் சிங், சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்புத், மைக் ஹெசன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. கபில்தேவ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க தற்போது நேர்காணலை நடத்திகொண்டிருக்கிறது.எனவே, அந்த ஆறு பேர் கொண்ட பட்டியலிலிருந்து மூன்று சிறந்த போட்டியாளர்களை பற்றி இந்தத் தொகுப்பில் காண்போம்.
#3.மைக் ஹஸன்:
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆறு ஆண்டு காலம் பணிபுரிந்து உள்ள மைக் ஹஸன், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை அந்த அணி முன்னேற அரும்பாடுபட்டார். மேலும், நியூஸிலாந்து அணியின் மிக வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். ராஸ் டெய்லரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க காரணமாய் அமைந்ததனால், பிரண்டன் மெக்கல்லத்தின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார், மைக் ஹசன்.
ஆனால், இவரின் அந்த சாத்தியமான முடிவால் தான் உலகின் தலை சிறந்த அணியாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. அணியின் தகுந்த திறனுள்ள வீரர்களைத் தேர்ந்தெடுத்து சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட காரணமாய் அமைந்தார், ஹாசன். ஆட்டத்திற்கு முன்னரும் பின்னரும் இவரது கூர்மையான விமர்சனம் ரசிகர்களிடையே கடும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னரே, விராட் கோலி நான்காம் இடத்தில் விளையாட வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளதைப் போல தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன் படைத்த மைக் ஹாசன், தற்போது பல்வேறு வித மாற்றங்களை காணவிருக்கும் இந்திய அணியின் நீண்டகால வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கலாம். மேலும், டங்கன் பிளட்சருக்கு அடுத்தபடியாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை வகிக்கும் வெளிநாட்டவர் என்னும் சிறப்பை பெறவும் வாய்ப்புள்ளது.
#2.டாம் மூடி:
1987 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் அங்கம் வகித்த வீரர்களில் ஒருவரான டாம் மூடி, கடந்த 2005ம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கி வந்தார். மேலும், இவரின் பயிற்சி ஒத்துழைப்பால் இலங்கை அணி 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தி 2016ஆம் ஆண்டு முதல் முறையாக அந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாய் அமைந்தார். பயிற்சியாளர் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட இவர், சிறந்த ஆளுமையை கொண்டுள்ளார். எனவே, இது இந்திய அணி நிர்வாகத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
#1.ரவி சாஸ்திரி:
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்ற பாடுபட்டவர் ஆன ரவி சாஸ்திரி உலக கோப்பை போன்ற தொடர்களை இதுவரை தமது பயிற்சியின் கீழ் இதுவரை வென்று தந்தது இல்லை என்ற மோசமான சாதனையை வைத்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராத் கோலிக்கும் இவருக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு உள்ளது எனவே பெரும்பாலும் இவரே அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அப்படி இருப்பினும் இவர் நிச்சயம் நியமிக்கப்பட்டால் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கக் கூடும் எனவே இந்திய ஆடவர் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என இரவு 7 மணிக்குள் தெரிந்துவிடும்