இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பதை பற்றி கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் பலரும் பேசி வந்தனர். இவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா கிரிக்கெட் தேர்வு குழு தேர்வு கடந்த திங்கட்கிழமை 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதில் இரு தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு இடம்பெறாமல் போனது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அவ்வாறு, தேர்வான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு,
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், முகமது சமி மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா.
இப்படி கேப்டனுக்கும் அணி நிர்வாகத்திற்கும் ஒரு சிறந்த பலமான 15 பேர் கொண்ட அணியை அளித்திருந்தது, இந்திய தேர்வு குழு. அவ்வாறு அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து களத்தில் விளையாடப்போகும் வெவ்வேறு மூன்று வடிவிலான ஆடும் லெவன்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.இரு சுழற்பந்து வீச்சாளர்கள், இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 ஆல்ரவுண்டர்களை உள்ளடக்கிய ஆடும் லெவன்:
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதலாவது ஆட்டத்தில் இத்தகைய ஆடும் லெவன் இடம்பெற்றால் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு தேவைப்பட்டால் விஜய் ஷங்கரை நான்காமிடத்தில் களமிறக்கலாம் என எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மிகத் தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளது. கடந்த சில சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார், விஜய் சங்கர். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு பார்மில் உள்ளார். மேலும், இந்திய அணிக்கு தேவைப்பட்டால் இவர் ஒரு பந்து வீச்சாளராக செயல்படுவார். ஓரளவுக்கு மட்டுமே சுழற்பந்து வீச்சு எடுபடும் இங்கிலாந்து மைதானங்களில் இரு ஸ்பின்னர்களான குல்தீப் மற்றும் சாஹல் இணை மிடில் ஓவர்களில் பந்துவீசி எதிரணியின் பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பர். வேகப்பந்துவீச்சை பொருத்தவரை பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் அல்லது முகம்மது சமி ஆகியோரில் ஒருவர் மட்டுமே இடம்பெறுவர். சமீபத்தில் அற்புதமான ஃபார்மில் உள்ள முகமது சமியே ஆடும் லெவனில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
முதலாவது ஆடும் லெவன்
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார் அல்லது முகமது சமி, பும்ரா.
#2.நான்காம் இடத்தில் களமிறங்கும் கே.எல்.ராகுல் :
2019 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு உலக கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம் பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. ஐபிஎல்-லில் நன்றாக விளையாடினால் மட்டும் இந்திய அணியில் இடம் பெற முடியாது என்று தேர்வு குழு அவ்வப்போது கூறி வந்தது. இருந்தாலும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்-லில் சிறப்பாகவே செயல்பட்டு வரும் ராகுல் எப்படி அணியில் இணைந்தார் என்பதில் தேர்வு குழுவினருக்கு சற்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவன் களம் இறங்குவார்கள். இவருக்குப் பின்னர் விராட் கோலி மூன்றாம் இடத்தில் ஆடுவார். பல சந்தேகங்களுக்கு உள்ளான நான்காம் இடத்தில் அணி நிர்வாகத்தின் விருப்பப்படி கே.எல்.ராகுல் களமிறக்கப்படலாம் என தேர்வு குழு கூறி இருக்கிறது.
இரண்டாவது ஆடும் லெவன் :
ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி. கே.எல்.ராகுல். தோனி, கேதர் ஜாதவ் , ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ,குல்தீப் யாதவ், சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.
#3.நான்காம் இடத்தில் தோனி மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய ஆடும் லெவன்:
சர்வதேச ஒருநாள் தொடர்களில் ஒரு சிறந்த பினிஷராக திகழ்ந்த தோனி, தற்போது ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் நான்காம் இடத்தில், தோனி களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மேலும் தெளிவுபடுத்தும் விதமாக, அணிக்கு தேவைப்பட்டால் தோனி நான்காம் இடத்திலும் களம் இறங்கலாம் என துணை கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாகத் திகழும் இங்கிலாந்து மைதானங்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த மூன்று பந்துவீச்சாளர்களை கொண்ட ஆடும் லெவன் இந்திய அணிக்கு தேவைப்படும். இதனால், பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது சமி உள்ளடக்கிய 3 பந்துவீச்சாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.
மூன்றாவது ஆடும் லெவன் :
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், முகமது சமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.