உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஐசிசி-யின் மிகப்பெரிய தொடரான 2019 உலகக் கோப்பை தொடருக்கு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே உலகக் கோப்பை போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தங்களை சிறப்பான முறையில் தயார் செய்து வருகின்றனர். உலகக் கோப்பை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எந்த நேரத்திலும் உலககோப்பை போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட தங்கள் அணியினை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவுக்க வாய்ப்புள்ளது.
இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாந்த், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் சேர்ந்து சரியான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளித்து ஒரு சிறந்த இந்திய அணியை உலக கோப்பைக்காக உருவாக்கி வைத்துள்ளனர். சில சமயங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்துக்களுக்கு இணங்க சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்பபளிக்கப்படும். இது சிலசமயம் சரியாக அமையும் , சில சமயம் மிகவும் தவறானதாக அமையும்.
இருப்பினும் இந்த முறை நிறைய தடவை இந்திய அணிக்கு சரியாக அமைந்து நிறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் காணப்பட்டு, உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். பெரும்பாலும் அணியில் நீண்ட நாட்களாக தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தும் வீரர்கள் தான் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்வுக்குழு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய அணியை அறிவித்தது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த இந்திய அணியில் சில எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் சில எதிர்பாரத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் 2019 ஐசிசி உலக கோப்பைக்கு சரியான 15 வீரர்களை அறிவிக்க மேற்கொண்ட மாற்றங்கள் என தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தற்போதைய இந்த மாற்றத்தினால் உலகக் கோப்பை அணியில் சில மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளது.
இந்த மாற்றங்களினால் இந்திய உலகக் கோப்பை அணிக்கு இடையூறு நிகழ அதிக வாய்ப்புள்ளது.
1. கே.எல்.ராகுல் தேர்வு
கே.எல்.ராகுலுக்கு இந்திய தேர்வுக்குழு மற்றொரு வாய்ப்பை ஆஸ்திரேலிய தொடரில் வழங்கியுள்ளது. இவரை இந்திய அணியில் மாற்று தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது நம்பர்-4 பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் அந்த இடத்திலோ உலகக்கோப்பை அணியில் விளையாட வைப்பதற்காக, தற்போது நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் ஒரு இறுதி வாய்ப்பாக வழங்கியுள்ளது அணி நிர்வாகம். கர்நாடக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 2018ல் இவரது ஆட்டத்திறன் மிக மோசமாக இருந்தது. டி20,டெஸ்ட்,ஓடிஐ என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 2018ல் மொத்தமாக 2 சதங்களே இவரிடமிருந்து வந்தது. இதனால் இவர்மீது இருந்த நம்பிக்கை தற்போது முழுவதுமாக நீங்கியுள்ளது. எனவே ஆஸ்திரேலிய தொடரில் இவரது ஆட்டத்திறனை வைத்து உலகக் கோப்பை அணியில் இவரை சேர்த்தால் அது சரியாக வர வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
2. தினேஷ் கார்த்திக்கின் நீக்கம்
சமீபத்தில் இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலகக் கோப்பை அணியில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கும் , இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக நேரடியாக தெரிவித்தார். இரண்டு வீரர்களுமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர்கள்தான் . ஆனால் இந்த இடத்தில் பார்க்கும் போது அனுபவம் வாய்ந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணிக்கு சரியான வீரராக தெரிகிறது.
தினேஷ் கார்த்திக் நீண்ட நாட்களாக இந்திய அணியில் விளையாடி வருவதால் அவருக்கு தகுந்த அனுபவம் இருக்கும். கேதார் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற சிறந்த ஹிட்டர்கள் கடைநிலை பேட்டிங் வரிசையில் இருப்பதால், தினேஷ் கார்த்திக் அவர்களுடன் இனைந்து சமீப காலங்களில் நிறைய போட்டிகளை முடித்து வைத்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் அதிரடியாக இருக்கும். தக்க சமயத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர் தினேஷ் கார்த்திக். அத்துடன் 2004ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக்.
தோனிக்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். எனவே இந்திய தேர்வுக்குழு இவரை மறுபடியும் இந்திய அணியில் சேர்த்து உலககோப்பை அணியில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.
3. ரவீந்திர ஜடேஜாவின் நீக்கம்
2019 உலக கோப்பை நடைபெற உள்ள இங்கிலாந்து ஆடுகளம் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக் கோப்பை தொடரில் ஒரு முக்கிய வீரர்களாக அணியில் திகழ்வர். குறிப்பாக மிடில் ஓவரில் சுழற்பந்து வீச்சாளின் தேவை அனைத்து அணிகளுக்கும் இருக்கும். கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தங்களது சுழற்பந்து வீச்சை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். எதிரணி எந்த அணியாக இருந்தாலும் சரி, அந்த அணியின் பேட்டிங்கை நொறுக்கும் திறமை இவர்கள் பெற்றுள்ளதால் உலகக் கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலுமே இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்குழு இந்த இருவரை மட்டுமே நம்பாமல் மாற்று சுழற் பந்துவீச்சாளர்களை தேடி வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜா ஒரு வழக்கமான பந்துவீச்சாளராக அணியில் இடம்பெற்று வருகிறார். அதன்பின் 2018 ஆசிய கோப்பை தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் ஜடேஜாவை இந்திய அணியிலிருந்து நீக்கி தவறான முடிவை எடுத்துள்ளனர் தேர்வு குழுவினர். அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த வீரரை தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியிலிருந்து நீக்கி மிகப்பெரிய தவறை செய்துள்ளது இந்திய தேர்வுக்குழு.
பல திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தாலும், சில சமயங்களில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படாமல் அணியிலிருந்து நீக்கியுள்ளது இந்திய தேர்வுக்குழு. இந்திய தேர்வுக்குழு தற்போது உலககோப்பை இந்திய அணிக்கு சில வீரர்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளது. மற்ற வீரர்களை சரியாக தேர்ந்தெடுக்காமல் வீரர்களை மாற்றி கொண்டே வருகிறது. உலககோப்பை தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் இந்த மாதிரியான பிரச்சினைகள் அணியில் நிலவுவது மிகுந்த வருத்தத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியின் தேர்வில் தேர்வுக்குழு இன்றுவரை ஒரு சரியான முடிவை எடுத்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பிலே இதனை நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே உலகக் கோப்பை தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் அணியை நன்றாக சீரமைத்து அற்புதமான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு உலகக் கோப்பை தொடருக்கு அனுப்ப வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.