இந்தியாவின் தேசிய விளையாட்டாக கிரிக்கெட் இல்லையென்றாலும் ஒரு மதமாகவே இங்கு போற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை விட மிகுந்த பிரபலமான போட்டியாக கிரிக்கெட் கருதப்படுகிறது.1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முதன்முதலாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற பிறகு, இந்த போட்டி மிகவும் பிரபலமடையத் துவங்கியது.
இன்று உலக அளவில் தங்களது சொந்த நாட்டிற்காக விளையாட பல லட்சம் இந்திய இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், கடுமையான உழைப்பு, போற்றக்கூடிய அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான பங்களிப்பு போன்ற காரணங்களால் வெகு சிலரே இந்திய சீனியர் அணியில் இடம் பெறுகின்றனர். நவீன சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. இருப்பினும், பல திறமையான பேட்ஸ்மேன்கள் இந்திய சீனியர் அணியில் நெடுநாட்களுக்கு இடம்பெற முடியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு இந்திய அணியில் சிறப்பாக விளையாடி திடீரென தங்களது முடிவை கண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ராபின் உத்தப்பா:
இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 86 ரன்கள் அடித்து இந்திய அணி ரசிகர்களை கவர்ந்தவர், ராபின் உத்தப்பா. அந்த காலகட்டத்தில் இவர் பல பந்துவீச்சாளர்களுக்கு அபாரமான பேட்ஸ்மேனாகவே தெரிந்தார். கர்நாடக சேர்ந்தவரான இவர். 2006-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பின்னர் சில காலம் தொடர்ந்து நீடித்து வந்தார். 2007ஆம் ஆண்டில் உலகக்கோப்பை தொடரில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்திய அணியின் மோசமான உலகக்கோப்பை தொடராகவே அது அமைந்தது. இதன் பின்னர், அதே ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணிவெல்ல இவரும் ஒரு காரணமாய் அமைந்தார். அந்த தொடரில் நடைபெற்ற சில ஆட்டங்களில் மறக்கதக்க முடியாத அளவிற்கு தமது பங்களிப்பினை அளித்துள்ளார். அணியின் எந்த ஒரு பேட்டிங் ஆர்டரிலும் களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை கலங்கடித்தார். எதிர்பாராத விதமாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இவரது ஃபார்ம் கேள்விக்குறியாகியதால் அதன் பின்னர் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த போதிலும் ஒரு அரை சதம் மட்டுமே கண்டு, அதன் பின்னர் நடைபெற்ற 7 போட்டிகளில் மிகுந்த ஏமாற்றம் அளித்தார். எனவே, இந்திய அணியிலிருந்து இவர் நிரந்தரமாக நீக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 934 ரன்களை குவித்துள்ளார்.
#2.யுவராஜ் சிங்:
2000-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் யுவராஜ் சிங் 82 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த மேட்ச் வின்னராக கருதப்பட்ட யுவராஜ் சிங் 2013ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு இன்றியமையாதது. இவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் 36.56 என்ற பேட்டிங் சராசரி உடன் 8701 ரன்களை குவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர், புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டதால் ஏறக்குறைய 20 மாதங்கள் கிரிக்கெட்டை விட்டு யுவராஜ் சிங் ஒதுங்கினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி வந்த இவர், இறுதிப்போட்டியில் தமது மோசமான ஆட்டத்தினால் இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு இடைவெளிக்குப் பின்னர், இந்திய அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 150 ரன்களை குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அதன் பின்னரும் நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் மீண்டும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். கிரிக்கெட் போட்டிகளில் பன்முகத் திறமைகளை கொண்டிருந்தாலும் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பெரிய அளவில் ஜொலிக்க தவறினார்.
#1.கௌதம் கம்பீர்:
2005-ஆம் ஆண்டு நடைபெற்ற பலமிகுந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய சுவர் என்னும் ராகுல் டிராவிட் உடன் இணைந்து 128 ரன்களை தமது பார்ட்னர்ஷிப்பில் உண்டாக்கி தமது முதலாவது சதத்தை பதிவு செய்தார், கௌதம் கம்பீர். இந்திய அணியின் அனைத்து 3 வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். தனது அபார ஆட்டங்களால் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் உடன் இணைந்து இவர் அற்புதமான பல பார்ட்னர்ஷிப்களை கம்பீர் உருவாக்கியுள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தமது அபார பங்களிப்பால் 97 ரன்களை குவித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாய் அமைந்தார். மேலும், இதுவே அவரது ஒருநாள் வாழ்க்கை வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டமாக இன்றளவும் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த பேட்ஸ்மேனான இவர், 2013ம் ஆண்டு முதல் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இவர் இறுதியாக விளையாடிய 25 ஒருநாள் போட்டிகளில் 7 அரை சதங்கள், இரு சதங்கள் உட்பட சிறப்பான பங்களிப்பை அளித்த போதிலும் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டார்.