பல்வேறு பரிணாமங்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் வடிவத்திற்கு தக்கவாறு வித்தியாசமான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. அதுபோலவே, வீரர்களின் மனநிலையும் திறன்களையும் சற்று வித்தியாசம் காணப்படுகின்றன. எனவே, அனைத்து மூன்று வழியிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கும் ஜாம்பவான்கள் அதற்கு தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளுதல், நிறைந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு போன்றவற்றை மேற்கொண்டதனால் வெற்றிகளை படைத்துள்ளனர். பல்வேறு போட்டிகளை கொண்ட இந்திய உள்ளூர் கிரிக்கெட் சற்று வித்தியாசமானதாகும். உலகெங்கிலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் மற்ற நாடுகளை காட்டிலும், இது மிக கடினமானதாகும். கிரிக்கெடை மட்டுமே தங்களது உயிர்மூச்சாகக் கொண்டு உள்ள பல லட்சம் இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் தங்களது அணிக்காக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுகின்றனர். பல்வேறு இலட்சியங்களையும் கனவுகளையும் கொண்டு உள்ள இத்தகைய வீரர்களில் வெகு சிலருக்கு மட்டுமே சர்வதேச அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் உள்ளூர் நாயகர்கள் தங்களை முத்திரை பதிக்க அடிப்படை தளமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் விளங்கி வருகிறது. அவ்வாறு, வெகு சில உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக விரைவிலேயே இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஜெயதேவ் உனத்கட்:
2010ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் 7 விக்கெட்களை கைப்பற்றி புகழ் வெளிச்சத்திற்கு வந்தார், ஜெயதேவ் உனத்கட். தமது துல்லியமான வேகப்பந்து வீச்சு தாக்குதலால் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக, அதே ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தார். இவர் களமிறங்கிய அந்த அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் இருந்தமையால், இந்திய அணியில் இருந்து தொடர்ந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இடம்பெற்று ஒரு போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றி மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். இதன் காரணமாக, இந்திய அணியின் குறுகிய கால போட்டிகளுக்கு மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்பாராவிதமாக, தமது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிதும் ஜொலிக்காமலேயே இருந்து வருகிறார், ஜெயதேவ் உனத்கட். இதுவரை அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளில் 18 இன்னிங்சில் களமிறங்கிய இவர், 22 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று சற்று சொதப்பிய வண்ணமே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#2.லக்ஷ்மி ரத்தன் சுக்லா:
பெங்கால் அணியின் தொடர்ச்சியான பங்களிப்பை ஏற்படுத்திவரும் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தமது ஆல்ரவுண்ட் திறமையின் மூலம் ரஞ்சித் தொடர்களில் 5,000 ரன்களையும் 150 விக்கெட்களையும் கைப்பற்றி மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றி உள்ளார். மேலும், இத்தகைய சாதனைகளை கடந்த வெகு சில வீரர்களில் இவரும் ஒருவர் என்பது தனிச்சிறப்பாகும். 2008ஆம் ஆண்டு துவங்கிய இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இடம்பெற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரப்பில் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர், தமது ஆறு ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில் அவ்வப்போது சிறப்பாக விளையாடி வந்துள்ளார். தமது 17-ஆவது வயதிலேயே சர்வதேச அழைப்பு விடுக்கப்பட்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இருப்பினும், சர்வதேச அளவில் அளவில் தமது ஆல்ரவுண்டு திறமையை இன்னும் வெளிப்படுத்தாமலேயே உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய இவர், 18 ரன்களையும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
#1.ஜோகிந்தர் ஷர்மா:
2007ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தமது அசாத்திய பந்துவீச்சு தாக்குதலால் எதிரணியை நிலைகுலைய செய்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாய் அமைந்தார், ஜோகிந்தர் சர்மா. இதன் காரணமாக, அடுத்த ஆண்டே நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இடம்பெற்று விளையாடினார். தமது ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் வாழ்வில் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் கண்ட இவர் ஆல்-ரவுண்ட் திறமையையும் நிரூபித்துள்ளார். அந்த அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 29 ரன்களை ஆட்டமிழக்காமல் இவர் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டிக்குப் பின்னர், நடைபெற்ற ஆட்டங்களில் தமது சீரான திறமையை வெளிக்கொணர தவறியதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.