அந்நிய மண்ணில் இந்திய அணி தடுமாறுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அணித் தேர்வு சரியாக அமையாததே ஆகும். ஒரு அணியின் வெற்றி (அல்லது) தோல்வியை தீர்மானிப்பது வீரர்களின் தேர்வு முறையில் தான் உள்ளது. வீரர்கள் தேர்வு முறையில் இரண்டு தவறான நிகழ்வுகள் நடக்கிறது . அதில் ஒன்று, நடப்பு அணியில் உள்ள சிறந்த வீரர்களை பயன்படுத்தாமல் இருப்பது , மற்றொன்று புதுமுக வீரர்களை டெஸ்ட் அணியில் களமிறக்க தயங்குவதும் ஆகும்.
இந்த இரண்டாவது நிகழ்வினை சரி செய்ய, தற்போது ஓடிஐ மற்றும் டி20-யில் நல்ல ஆட்டத்திறனில் உள்ள வீரர்களை டெஸ்ட் அணியில் களமிறக்க வேண்டும். இந்த வீரர்கள் ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தங்களை நிருபித்து உள்ளனர்.
இவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழு வீரர்களை தேர்வு செய்ய நினைத்தால் இந்த 3 வீர்களை கண்டிப்பாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
#1.கலீல் அகமது
அந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் 2018ல் சிறப்பாக விளையாடி உள்ளனர். உதாரணத்திற்கு இந்தியா இந்த வருடத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும். இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற போது தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்-களை விட டெய்ல் என்டர்ஸ் எனப்படும் கடைநிலை வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் கடைநிலை பேட்டிங்கை கட்டுப்படுத்த வெவ்வேறு கோணங்களில் பந்துவீச்சும் திறமை பெற்ற வீரர்கள் தேவை. இந்த வீரர்களை சரியாக பயன்படுத்தி கடைநிலை பேட்டிங்கின் பார்ட்னர் ஷிப்பை வீழ்த்த முடியும். இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இதற்கு சரியாக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள்தான் கடைநிலை வீரர்களால் கணிக்க முடியாத அளவிற்கு வெவ்வேறு கோணங்களில் பந்தை வீசுவர்.
இதனை நாம் கலீல் அகமது -வின் பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடிந்தது. இவர் முன்னாள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜாஹிர் கான் மற்றும் நெக்ராவைப் போல் பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். இவரை ஆஸ்திரேலியத் தொடரின் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணி தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு இவரது வெவ்வேறு விதமான பந்துவீச்சு கண்டிப்பாக தேவை.
எனவே கலீல் அகமதுவிற்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளித்து பார்க்கலாம்.
#2.யுஜ்வேந்திர சகால்
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான லெக்- ஸ்பின்னர் இல்லை. சற்று டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றை திருப்பி பார்க்கும் போது லெக்-ஸ்பின்னில்தான் கடைநிலை வீரர்கள் அதிகம் தங்களது விக்கெட்டுகளை இழந்திருப்பர். இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். சகால் ஒரு மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்றாலும் , சறுக்கலான மைதானங்களில் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவரது பந்துவீச்சை மேம்படுத்த ஏதுவாக இருக்கும்.
இவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட மாட்டார் என்று கூட சொல்லலாம் ஆனால் அனில் கும்ளே போன்ற முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் முதலில் பங்கேற்று பின்னர் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் சாதித்ததை போல் சகாலுக்கும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.
தற்போதைய டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்நிய மண்ணில் அவ்வளவாக இவர்களது பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே சகால் - அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு சரியானதாக இருப்பார்.
#3.ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர் 2017ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் அணியில் தேர்வானார். ஆனால் ஆடும் XIல் தேர்வாகவில்லை. இத்தொடருக்குப்பின் இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை கண்டுகொள்ளவே இல்லை.
இந்திய டெஸ்ட் அணியில் 6வது பேட்டிங் வரிசைக்கு ஸ்ரேயஸ் ஐயர் சரியான வீரராக இருப்பார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 53.02 சராசரியுடன் 6 வது பேட்டிங் வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேனாக இவர் உள்ளார்.
இவரது பேட்டிங் மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் சற்று வேறுபட்டும் , ஆட்டத்தின சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றி ஆடும் திறமையையும் பெற்றுள்ளதால் இவரை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யலாம். சென்ற மாதத்தில் ரஞ்சிக்கோப்பையில் ஸ்ரேயஸ் ஐயர் இரட்டை சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.