நம் அனைவராலும் மறக்க முடியாத போட்டி என்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி. அந்தப் போட்டியில் இந்திய அணி 246 ரன்களை சேஸ் செய்து வராலாற்று சாதனை படைக்க காத்திருக்க, கடைசி பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்படும். அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த தோணி அந்த பந்தில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பார். இது பெரும்பாலான ரசிகர்களின மனதை உடைத்த போட்டி என்றே கூறலாம். இதே போல் 1986 ஆம் ஆண்டு ஷார்ஜா கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் ஜாவத் மியான்டட் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியிடமிருந்து வெற்றியை தட்டிப் பறிப்பார். இது அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை பெரிதும் பாதித்த போட்டியாக இருந்தது. இது போன்று இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய சில போட்டிகளை இந்த தொகுப்பில் காணலாம்.
#3) 2007 உலககோப்பை, இந்தியா vs வங்கதேசம்

இந்திய அணி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற குழு போட்டியின் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியை சந்தித்தது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் நிலையில் இருந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி ரஹ்ஹிம்-ன் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவை எளிதில் வென்றது. இதனால் இந்திய அணி உலககோப்பை தொடரிலிருந்து குரூப் சுற்றிலேயே வெளியேறியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது இந்திய வீரர்களைக் காட்டிலும் ரசிகர்களை பெரிதும் பாதித்தது.
#2) 1996 உலககோப்பை அரை இறுதிப்போட்டி

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையில் இந்திய அணி ஒருவழியாக போராடி அரை இறுதி வரை சென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அரை இறுதியில் இலங்கை அணியை எதிர் கொண்டது இந்திய அணி. அதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 251 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரைத் தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. சிறப்பாக ஆடிய அவரையும் 65 ரன்களில் இருந்தபோது ஸ்டெம்ப்பிங் செய்து வெளியேற்றினர். அதன் பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது. இது இந்திய அணி இரண்டாவது முறையாக உலககோப்பையைக் கைப்பற்றும் என எண்ணிய ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
#1) 2015 உலககோப்பை அரையிறுதி போட்டி

2015 உலககோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளையும் வென்று அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் சொதப்பலினால் 95 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்து இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளித்தது.