உலகக் கோப்பை என்பது ஒரு பிரம்மாண்டமான கிரிக்கெட் போட்டியாகும். உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு நாட்டின் இலக்காக இருக்கும். உலகக்கோப்பை ஆரம்பிக்க ஐந்து மாதங்களுக்கு குறைவாகவே நாட்கள் உள்ள நிலையில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அனைத்து உலகக் கோப்பை அணிகளும் தங்களை முழு வீச்சில் தயார் செய்து வருகின்றனர். 2019 உலகக் கோப்பையில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெற உள்ளது. இந்திய அணி அனைவரின் விருப்பமான அணியாகவும், உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள நாடகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஓடிஐ தொடரை வென்றுள்ளது. இந்திய அணி அந்நிய மண்ணில் தனது பெரும்பான்மையை நிருபித்து டாப் அணிகளுக்கிடையே தனது ஆட்டத்திறனை நன்றாக வெளிபடுத்தியுள்ளது. அத்துடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக டெஸ்ட் தொடரையும் , ஓடிஐ தொடரையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என முன்னிலையும் வகிக்கிறது. இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு முன் கடைசி வெளிநாட்டு தொடர் இந்த தொடரே ஆகும். ஆஸ்திரேலிய தொடரை வென்றதன் மூலம் இந்திய அணிக்கு மேன்மேலும் ஆட்டத்திறன் பெருகியுள்ளது. அத்துடன் இந்திய வீரர்களின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்திய அணி ஒரு சூப்பர் பவர் கொண்ட அணியாக கிரிக்கெட் உலகில் திகழ்கிறது. இந்திய அணி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக சிறப்பாக காணப்படுகிறது. நிறைய பேட்டிங் மன்னர்களை இந்திய அணி உருவாக்கியுள்ளது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் , விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களை உலகிற்கு அறிமுகம் செயது வைத்தது இந்திய அணி.
இருப்பினும் இந்திய பௌலிங் வரிசை சற்று மந்தமாகவே நீண்ட நாட்கள் இருந்து வந்தது. கடந்த காலங்களில் இந்திய அணியில் ஒரு சூப்பர் பவர் பௌலிங் என யாரையும் அவ்வளவாக கூற முடியாது. ஆனால் அந்தச் சூழல் தற்போது முற்றிலும் மாறியுள்ளது. இந்திய அணி தற்போது நிறைய சூப்பர் பவர் கொண்ட பௌலிங் வரிசையை உருவாக்கி நிறைய போட்டிகளில் இந்திய அணி பந்துவீச்சை வைத்தே வென்றுள்ளனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இந்திய அணியில் நிறைய அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் . இந்திய அணித் தேர்வாளர்களுக்கு யாரை உலகக் கோப்பையில் எடுப்பது என்று பெரும் தலைவலியாக தற்போது உள்ளது. நாம் இங்கு 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி காண்போம் .
#3.முகமது ஷமி
முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் ஒரு முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் ஓடிஐ , டி20 போட்டிகளில் வழக்கமான வீரராக இடம்பெறுவதில்லை. தற்போது இவர் ஆஸ்திரேலியாவிற்கெதிரான ஒருநாள் போட்டித்தொடர்களில் இடம்பெற்று பௌலிங்கில் அசத்தியுள்ளார். ஷமி 3 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வலதுகை வேகப்பந்து வீச்சளாரான முகமது ஷமி மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடியவர் ஆவார் . அத்துடன் வழக்கமான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை பெற்றவராக விளங்குகிறார். இவர் 2015 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று அத்தொடரில் ஒரு முக்கியமான பௌலராக திகழ்ந்தார் . முகமது ஷமி ஒரு சிறந்த வேகப்பந்து விருப்ப வீரராக இங்கிலாந்து மைதானத்தில் திழ்வார் .
முகமது ஷமி நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பெற்றுள்ளார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அத்துடன் அதிவேகமாக ஓடிஐ கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பௌலர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . முகமது ஷமி இதுவரை 57 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 103 விக்கெட்டுகளை வீழ்த்தி 25.54 சராசரியை வைத்துள்ளார். எனவே இவரது பங்களிப்பு உலகக் கோப்பைக்கு கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவையான ஒன்றாகும். எனவே முகமது ஷமி உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .
#2.புவனேஸ்வர் குமார்
இந்திய தற்போதைய பந்துவீச்சாளர்களுள் புவனேஸ்வர் குமார் ஒரு முக்கிய வீரராக இந்திய அணியில் பார்க்கப்படுகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் தற்போது அதிகம் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்தான் இவருக்கு அதிகம் வாயப்பு கிடைக்கிறது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். அத்துடன் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 17.37 சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புவனேஸ்வர் குமார் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அவர் வீசும் பந்து நன்றாக ஸ்விங்காகி வரும். பெரும்பாலும் ஸ்விங் பௌளர்களுக்கு இங்கிலாந்து மைதானம் ஏதுவாக இருக்கும். பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இவரது பந்துவீச்சு இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்திய அணியில் சர்வதேச போட்டிகளில் அனுபவ பௌலர் என்றால் அவர் புவனேஸ்வர் குமார் மட்டுமே. புவனேஸ்வர் குமார் இங்கிலாந்து மைதானத்தின் பந்துவீச்சு இரகசியங்களை சரியாக அறிந்து வைத்திருப்பவர். இந்திய அணி 2019 உலகக் கோப்பை வெல்ல வேண்டுமெனில் இவரது பங்களிப்பு மிகவும் தேவை.
புவனேஸ்வர் குமார் இதுவரை 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36 சராசரியுடன் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் புவனேஸ்வர் குமார் பின்வரிசையில் சிறப்பான பேட்டிங்கை செய்யக்கூடிய திறமையை பெற்றுள்ளார். கடினமான சமயங்களில் இவரது பேட்டிங் நிறைய முறை இந்திய அணிக்கு கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உலகக் கோப்பையில் இவர் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
#1.ஜாஸ்பிரிட் பூம்ரா
ஜாஸ்பிரிட் பூம்ரா தற்போதைய இந்திய பௌலிங் யுனிட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார். இவர் இந்திய அணியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளையும் விளையாடும் வழக்கமான இந்திய பௌலராக உலக கிரிக்கெட்டில் உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பௌலிங்கில் வைத்துள்ளார் பூம்ரா. பூம்ரா விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தன்னை சரியாக நிருபித்து , சிராக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் திறமை பெற்றவராக விளங்குகிறார். இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் பூம்ராவின் பங்கு கண்டிப்பாக வேண்டும்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பூம்ராவின் பந்துவீச்சு யாரலும் மறக்க முடியாதது ஆகும். பூம்ரா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் நாதன் லயானுடன் முதல் இடத்தை வகித்தார். ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது ஏனேனில் இவர் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் வேலைபளு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. அத்துடன் நியூசிலாந்து தொடரிலும் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை ஆரம்பிக்க இன்னும் 5 மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளரை காயம் காரணமாக இழக்க கூடாது என்ற காரணத்தால் கூட பிசிசிஐ இவருக்கு ஓய்வு அளித்திருக்கலாம்.
பூம்ரா கடந்த 3 வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். நிறைய மாற்றங்களை தனது பௌலிங்கில் மாற்றி ஒரு சிறப்பான பந்துவீச்சாளராக தற்போது இந்திய அணியில் உள்ளார். பூம்ரா யார்க்கர் வீசுவதில் கைத்தேர்ந்தவராக விளங்குகிறார். டெத் ஓவரில் தனது யாரக்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை பெற்றவராக விளங்குகிறார். பேட்டிங் வரிசை எவ்வாறு இருந்தாலும் அதை தகர்த்தெறியும் திறமை பூம்ராவிற்கு உள்ளது. தற்போது ஐசிசி-யின் சர்வதேச ஓடிஐ பௌளர்களின் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார் பூம்ரா. இவர் மொத்தமாக இதவரை 44 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 21 சராசரியுடன் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே உலகக் கோப்பை இந்திய அணியில் இவரது பெயர் இல்லாமல் இருக்காது.