தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணியானது சிறப்பாக ஆடி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியிலிருந்து துவக்க வீரரான ஷிகர் தவான் பாதியிலேயே அணியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்-க்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இந்தியாவில் சர்ச்சைக்குரிய நான்காம் இடத்தில் களமிறங்குவதற்காக அணியில் சேர்க்கப்பட்ட விஜய் சங்கரும் காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அணியில் காத்திருப்பு வீரராக இருந்த ராயுடுவுக்கு பதிலாக எவரும் எதிர்பார்க்காத வகையில் மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்தது அணி நிர்வாகம். இதுவரை ஒரு ஒருநாள் போட்டிகளில் கூட விளையாடாத அவரை நேரடியாக உலககோப்பை அணியில் சேர்த்தது மிகவும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்க வேண்டிய மூன்று முக்கிய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்
#3) அஜின்கியா ரஹானே
இந்திய அணி நான்காம் இடத்திற்காக பல வீரர்களை களமிறக்கி பரிசோதித்து பார்த்தது. அதில் ஆரம்ப காலங்களில் துவக்க வீரராக இருந்த ரஹானேவையே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றி பல போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறக்கியது. 2015 உலககோப்பை தொடருக்கு பின்னர் அதிக போட்டிகள் இந்திய அணிக்காக நான்காம் இடத்தில் களமிறக்கப்பட்ட இவர் அந்த இடத்தில் அதிக ரன்களையும் குவித்துள்ளார். ஆனால் ஒருசில காரணங்களால் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் இவருக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக தென்னாப்ரிக்க அணிக்கெதிரான தொடரில் இவரை நான்காம் இடத்தில் களமிறக்கியது இந்திய அணி. ஆனால் அந்த தொடர் முழுவதும் இவர் 140 ரன்கள் மட்டுமே குவித்ததால் அவரை அணியை விட்டு நீக்கியது பிசிசிஐ.
உலககோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களைப் பொறுத்தவரை அதில் விளையாடும் வீரர்களுக்கு அதிக அனுபவம் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது மயங்க் அகர்வாலைக் காட்டிலும் அணியில் ரஹானே சேர்க்கப்பட்டிருக்கலாம். தற்போது உலககோப்பை தொடரில் இடம் கிடைக்காததால் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இவர் அங்கும் பல சதங்களை அடித்து அசத்தி வருகிறார்.
#2) ஸ்ரேயஸ் ஐய்யர்
பல முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த ஸ்ரேயஸ் ஐய்யருக்கு இந்திய அணியில் கூடிய விரைவில் வாய்ப்பு கிடைத்தது. மிடில் ஆர்டரில் இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர் ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்தாலும் அதன் பின் ஒருசில சறுக்கல்கள் காரணமாக இவருக்கு அதன்பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவே இல்லை. ஐபிஎல் தொடரில் கூட டெல்லி அணிக்கான இவரது சிறப்பான ஆட்டத்தினால் அனைவரையும் கவர்ந்தார் இவர். இந்தியா ஏ அணி இங்கிலாந்து ஏ அணியுடன் மோதிய தொடரிலும் இங்கிலாந்து மண்ணில் இவர் சிறப்பாக விளையாடி இருந்தார். எனவே தற்போதைய உலககோப்பை அணியில் விஜய் ஷங்கரின் இடத்திற்கு ஸ்ரேயஸ் ஐய்யர் தகுதியானவரே.
#1 அம்பத்தி ராயுடு
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் இவர். ஆனால் அதன் பின் 9 ஆண்டுகள் கழித்தே இவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்தவர் அம்பத்தி ராயுடு. இந்திய அணியின் சர்ச்சைக்குரிய அந்த நான்காம் இடத்திற்காக பல பரிசோதனைக்கு பின் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்ட இவர் ஒரு சதத்தையும் அடித்து அந்த இடத்தில் நிரந்தரமாக்கினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையிடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இவர். உலககோப்பை தொடருக்கான அணியில் கண்டிப்பாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு பதிலாக விஜய் ஷங்கருக்கு வாய்ப்பளித்து அதிர்ச்சி அளித்தது பிசிசிஐ. மேலும் அந்த சமயத்தில் இவரின் 3 டி டிவிட்டும் மிகவும் வைரலானது. இந்திய ஆணி நிர்வாகம் இவரையும், ரிஷப் பண்ட்-டையும் காத்திருப்பு வீரர்களின் பட்டியலில் சேர்த்தது. அதாவது அணியிலிருந்து ஏதேனும் ஓரு வீரர் விலகும் பட்சத்தில் இவர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும். அந்தவகையில் முதலில் தவானும் பதிலாக பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் விஜய் ஷங்கருக்கு மாற்று வீரராக இவரை தேர்வு சேய்யாமல் மயங்க் அகர்வாலை தேர்வு செய்து அனைவருக்கும் பேரதிர்ச்சி அளித்தது இந்திய அணி நிர்வாகம். இதன் விரக்தி காரணமாகவே ராயுடு இன்று சர்வதேச போடாடிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.