2019ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் கடந்த தொடரின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளனர்.
ஓவ்வொரு வருடமும் புதுப்புது கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சர்வதேச அணியில் இடம்பெறுகின்றனர். அதே சமயம் சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதேப்போன்ற ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது இல்லை.
நாம் இங்கு 2019 ஐபிஎல் தொடரில் தங்களது திறமையை நிருபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.
#3.மயான்க் அகர்வால்
கர்நாடகத்தைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேனான மயான்க் அகர்வால் சில வருடங்களாக அனைத்து வகையான உள்ளுர் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சமீபத்தில் இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி தனது அற்புதமான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார்.
28 வயதான மயான்க் அகர்வால் உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை. இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 59 போட்டிகளில் பங்கேற்று 16.75 என்ற மோசமான சராசரியுடனும், 124.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 938 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இவர் ஐபிஎல்போட்டியில் மொத்தமாக 3 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது திறமைக்கு இந்த ரன்கள் மிகவும் குறைவே ஆகும். உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் இவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கும். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 43 போட்டிகளில் பங்கேற்ற இவர் 34.55 சராசரி மற்றும் 136.02 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1382 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக இத்தொடரில் 111 ரன்களை ஒரு போட்டியில் குவித்துள்ளார். இதுவே இன்று வரை இவரது டி20யின் அதிகபட்ச ரன்களாக உள்ளது. அத்துடன் 12 அரைசதங்கள் மற்றும் 1 சதத்தினை குவித்துள்ளார்.
2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் இவரது அதிரடி பேட்டிங்கால் ரன்குவிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.மார்டின் கப்தில்
நியூசிலாந்து அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரரான மார்டின் கப்தில் ஓடிஐ/டி20 போட்டிகளில் தற்போது சிறப்பான பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் மட்டும் இவரால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்த இயலவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்து ஐபிஎல் தொடரில் ஜொலிக்காத கிரிக்கெட் வீரர்களுள் இவரும் ஒருவராவார். 32 வயதான இவர் 10 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 21 என்ற சாதாரண சராசரியுடனும், 132.17 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 189 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச டி20யில் மார்டின் கப்தில் 74 போட்டிகளில் விளையாடி 33.91 சராசரியுடன் 2272 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டி20யில் அதிகபட்சமாக 105 ரன்களை ஒரு போட்டியில் அடித்துள்ளார். 14 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை குவித்துள்ள இவர் சர்வதேச டி20 அளவில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் வகிக்கிறார்.
2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் அணியில் விளையாட உள்ள இவர் சர்வதே கிரிக்கெட் தனது ஆட்டத்திறனை எவ்வாறு வெளிபடுத்தினாரோ அவ்வாறே ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.காலின் முன்ரோ
இப்பட்டியலில் கடைசியாக உள்ள பேட்ஸ்மேன் காலின் முன்ரோ. நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான காலின் முன்ரோ 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இவர் தனது அணிக்காக தனியாளாக நின்று ஆட்டத்தை வென்று கொடுப்பார். தற்போது எந்த வகையான சிறந்த பௌலிங்காக இருந்தாலும் அதனை சிதைக்கும் வகையில் இவரது பேட்டிங் உள்ளது.
இவர் 47 டி20 போட்டிகளில் பங்கேற்று 33.6 என்ற சராசரியுடனும், 162 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1411 ரன்களை குவித்துள்ளார். டி20யில் இவரது அதிகபட்ச ரன்கள் 109 ஆகும். அத்துடன் 9 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களை டி20யில் குவித்துள்ளார்.
ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. 9 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 11.62 சராசரியுடனும், 130.99 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், 99 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
2018 ஐபிஎல் தொடர் மோசமாக இவருக்கு அமைந்தாலும், 2019 ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் இவரை தக்க வைத்துள்ளது. இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது பேட்டிங் திறமையை நிருபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் இந்திய பௌலர்களின் பந்துவீச்சை இவர் சிதறடித்தது குறிப்பிடத்தக்கது.