பும்ரா 2013 ஆம்.ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான போட்டியிலேயே இவரது வித்தியாசமான பந்துவீசும் தன்மை மூலம் அனைவரையும் கவர்ந்தார். அந்த போட்டியில் அவரது முதல் விக்கெட்டே விராத் கோலி தான். முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமின்றி அந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசி அசத்தினார் பும்ரா.
தற்போதைய இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பதில் இவர் வல்லவர். இவர் நேராக ஒன்றும் இந்திய அணியில் இணைந்து விடவில்லை. ஆரம்ப காலங்களில் முதல் தர போட்டிகளில் பங்கேற்று அதில் சிறப்பாக செயல் பட்டதன் மூலமே தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் முதல் முதலாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். அதற்கு முன்னதாகவே டி20 போட்டிகளில் இவர் அறிமுகமாகிவிட்டாலும் ஒருநாள் போட்டிகளில் சற்று தாமதமாகவே நுழைந்தார்.
அப்போது ஆஸ்திரேலியாவிற்கு செல்வதில் ஏற்பட்ட விசா பிரச்சணை காரணமாக இவர் அங்கு செல்வதற்கு தாமதமானது. அதற்குள் அங்கு தொடரின் பாதி போட்டிகள் முடிந்து விட்டன. இறுதியில் அடித்தது அதிர்ஷ்டம். புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அந்த தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால் அவருக்கு பதிலாக அணியில் பும்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த போட்டியிலேயே இவர் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரராகவும் நாடு திரும்பினார். பின்னர் அதோடு ஓயாமல் தனது விடா முயற்சியால் தற்போது ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணமான மூன்று முக்கிய காரணங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#1) வித்தியாசமான பந்து வீசும் தன்மை
கிரிக்கெட் உலகில் வித்தியாசமான முறையில் பந்துவீசும் பந்துவீச்சாளர் யார் எனக் கேட்டால் பெரும்பாலனவர்களின் பதில் பும்ரா தான். இவரது பந்துவீச்சை எதிர்கொள்வதும் கடினமானதே. அவரின் உடலை வளைத்து கைகளை நீட்டி பந்து வீசுவது அவருக்கு அதிக வேகம் மற்றும் பவுன்சரையும் கொடுக்கிறது. இவரது பந்தை அடிக்க மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறுவதற்கு இதுவே காரணம். இவர் எவரின் பந்துவீச்சு தன்மையையும் காப்பியடிக்காமல் சுயமாக தனது இயல்பான முறையிலேயே பந்து வீசுவது இவருக்கு பெரிய பலம். இவரின் அசைவின் காரணமாக பந்து எங்கே வீசப்போகிறார் என்ற கணிப்பே பேட்ஸ்மேனுக்கு குழப்பத்தை உண்டாக்கும். விளையாட்டை பொருத்தவரையில் வீரர்களின் அசலான ஆட்டமுறைகளே அவர்களுக்கென தனி இடத்தை கொடுக்கிறது. மற்ற வீரர்களின் பாணியில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் யாரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிலைத்து நின்றதில்லை. இந்த வகையில் இது பும்ராவுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
#2) யாக்கர்
இன்றைய நாள் வரையில் துள்ளியமான யாக்கருக்கு எவ்வளவு பெரிய வீரர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தே போவார்கள். பும்ராவின் இந்த யாக்கர் வீசும் தன்மைக்கு அவரின் சிறுவயது பயிற்சியே காரணமாக உள்ளது. இவர் சிறு வயதில் உள்ளபோது மதிய வேளையில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பந்து வீசி விளையாடுவார். ஆனால் இதைக் கண்ட இவரது தாயார் வெயிலில் ஏன் இப்படி விளையாடுகிறார் என வீட்டிற்குள் அடைத்து விடுவாராம். ஒருமுறை பும்ரா பந்துவீசும் போது அந்த பந்து சரியாக தரையும் சுவரும் இணையும் இடத்தில் ( யாக்கர் ) பட்டது. ஆனால் சாதாரணமாக சுவரில் படும் பந்தில் சத்தத்தை காட்டிலும் இது மிகக்குறைவான சத்தத்தையே ஏற்படுத்தியது. எனவே அந்த இடத்தில் பந்து படும்படியே பந்து வீசி பும்ரா பழகி வந்துள்ளார். இதுவே இவரின் தற்போதைய யாக்கர் வீசும் தன்மைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவர் தற்போதைய இந்திய அணியின் யாக்கர் ஸ்பைஷலிஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறார்.
#3) போட்டியின் தன்மையை உணர்ந்து பந்துவீசும் தன்மை
வெறும் யாக்கர் மற்றும் பவுன்சர்களை வீசி மட்டுமே எதிரணியை வீழ்த்தி விட முடியாது. போட்டியின் அப்போதைய சூழ்நிலையை உணர்ந்து பந்து வீசுவதே இவரின் தனிப்பண்பு. முக்கியமான நேரங்களில் ஸ்லோ பால்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் பும்ரா சிறந்தவர். இவரின் இந்தகைய லைன் மற்றும் லென்த்களை மாற்றி பந்து வீசி தென்னாப்ரிக்க அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அனைத்து காரணிகளையும் கொண்டுள்ளதாலே பும்ரா பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.