உலக கோப்பை தொடரில் தோனி கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள்!!

Ms Dhoni
Ms Dhoni

உலக கோப்பை தொடர் ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடர், வருகின்ற மே மாதத்தின் இறுதியில், இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்திய அணி கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில், கோப்பையை வென்றது. அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தது. தற்போது இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அதில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக உலக கோப்பை தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பற்றி இங்கு காண்போம்.

#1) மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் தோனி

Ms Dhoni
Ms Dhoni

நமது இந்திய அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர், மிக வலுவான நிலையில் உள்ளது. தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக சொதப்பி வந்தனர். விராட் கோலி மட்டும்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்வாறு தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து, இந்திய அணி தடுமாறும் பொழுது, மிடில் ஆர்டரில் பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை, தோனி செய்து வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோனி இறுதி வரை நிலைத்து நின்று விளையாடி, அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2) சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் தோனி

Ms Dhoni
Ms Dhoni

தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்றால், அது தோனி மட்டும்தான். அதுமட்டுமின்றி நமது இந்திய அணியில் தோனியைத் தவிர, அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்-க்கு விக்கெட் கீப்பராக செயல்படும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவருக்கு அனுபவம் குறைவு என்பதால் விக்கெட் கீப்பர் பணியை சரியாக செய்யவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர், மகேந்திர சிங் தோனி நமது இந்திய அணிக்கு விளையாடுவது என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை நம் அனைவருக்கும் உணர்த்தியது.

#3) மிக அனுபவம் வாய்ந்த வீரர் தோனி

Ms Dhoni
Ms Dhoni

தற்போது நமது இந்திய அணியில் அதிகமாக இளம் வீரர்கள் தான் இடம் பெற்றுள்ளனர். நிறைய போட்டிகள் விளையாடாததால் அவர்களுக்கு அனுபவம் சற்று குறைவாகத்தான் உள்ளது. போட்டி இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லும் பொழுது, தோனியின் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவி வருகிறது. பந்து வீச்சாளர்களுக்கு, எதிரணியின் பேட்ஸ்மேனை எவ்வாறு விக்கெட் எடுக்க வேண்டும் என்று மைதானத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார். இக்கட்டான சூழ்நிலையில் எந்த பவுலருக்கு ஓவர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது தோனி மட்டும்தான். தோனியின் முடிவு பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த மூன்று காரணங்களும், தோனி நம் இந்திய அணிக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

Quick Links