வழக்கம் போல் இந்த வருடமும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். வார்னர் போன்று பவர்பிளேயில் அதிரடி காட்டும் வீரர் கிடையாது; கடைசியில் வந்து ஆட்டத்தையே திசை திருப்பும் ரஸல் போன்ற “காட்டுச்சுத்து” மன்னர்கள் இங்கு கிடையாது; பும்ரா போல் துல்லியமாக ‘யார்க்கர்’ வீசும் பந்துவீச்சாளரும் கிடையாது. ஆனால் ‘தல’ தோனி இருக்கிறார். சென்னை அணி வெற்றி பெற அது போதுமே.
மற்ற அணிகளுக்கு எப்படியோ, ஆனால் சென்னை அணிக்கு அதன் சொந்த மைதானமான சேப்பாக்கம் வெற்றி கோட்டையாக திகழ்கிறது. இரண்டு வருட தடைக்குப் பிறகு சென்ற வருடம் திரும்பி வந்த சென்னை அணியால், சில அரசியல் காரணங்களுக்காக அதன் சொந்த மண்ணிலேயே விளையாட முடியாமல் போனது. பூனேவை சொந்த மைதானமாக கொண்டு விளையாடினாலும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு தங்கள் அணியை பார்க்கப் போகிறோம் என்ற சென்னை ரசிகர்களின் ஏக்கம் நிராசையானது. ஆனால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்க, கோப்பையை வென்று அவர்களின் காலடியில் காணிக்கையாக்கியது சென்னை அணி.
இந்த வருடம் சென்னையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று எதிரணியை பந்தாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். நிச்சியம் இந்த முறை சேப்பாக்க மைதானத்தில் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெறும் என்றே தெரிகிறது. அப்படியென்றால், இந்த முறையும் சென்னை அணிக்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இப்போதுள்ள திட்டப்படி ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் தான் நடக்க இருக்கிறது.
சேப்பாக்க மைதானம் ஏன் சென்னை அணிக்கு கோட்டையாக திகழ்கிறது என்பதற்கான மூன்று காரணங்கள்....
3. சுழற்பந்து வீச்சு தாக்குதல்
சேப்பாக்க மைதானத்தின் தன்மையை ஒவ்வொரு போட்டியிலும் கணிக்க கடினமாக இருந்தாலும், இங்கு சுழற்பந்து வீச்சு முக்கிய அம்சமாக இருக்கிறது. இப்போதுள்ள ஐபிஎல் அணியில் சுழற் பந்துவீச்சில் வலிமையான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இம்ரான் தாஹிரும், ஹர்பஜன் சிங்கும் தங்கள் அணுபவத்தால் சிறப்பான பங்களிப்பை சென்னை அணிக்கு அளித்து வருகிறார்கள். அதுவும் ஹர்பஜன், தோனியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கிறார். இதுதவிர ஜடேஜாவின் பந்துவிச்சீற்கும் சென்னை மைதானம் நன்றாக கை கொடுக்கிறது. மேலும், சேப்பாக்க மைதானத்தில் இவர்களின் சுழற்பந்து வீச்சினால் எதிரணிகள் குறைவான ரன்களே அடிக்கின்றன. இது சென்னை அணியின் வெற்றிக்கு எளிதாக அமைந்து விடுகிறது.
2. இங்குள்ள சூழலுக்கு சென்னை பேட்ஸ்மேன்கள் நன்றாக பொருந்திப் போகிறார்கள்
சென்னை அணியில் இளம் பேட்ஸ்மேன்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அவர்களிடம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் போட்டி சமயத்தில் தங்களது சொந்த மைதானத்தின் தன்மைக்கு தகுந்தவாறு கச்சிதமாக விளையாடுகிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்து சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் தான் உள்ளார். மற்றொரு வீரரான டூபிளெஸ்ஸி 2011-ம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த முறை அதிக ரன்கள் அடித்த அம்பதி ராயுடு வழக்கமாகவே சுழற்பந்துவீச்சில் நன்றாக ஆடக் கூடியவர்,. மற்றொரு புறம் ஷான் வாட்சன் என்ற அதிரடி வீரர். இந்த வயதிலும் அவர் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருகிறார். இவர்கள் எல்லாரையும் விட, இக்கட்டான சமயத்தில் அணியை காப்பாற்ற தோனி இருக்கிறார்.
1. தோனியின் கேப்டன்சி:
பொதுவாகவே, கேப்டன் நன்றாக செயல்பட்டால் அந்த அணியின் செய்ல்பாடுகளும் நன்றாக இருக்கும் என கூறப்படுவதுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பல அனுபவமிக்க வீரர்களை கொண்ட அணிக்கு சிறந்த கேப்டன் மட்டுமல்ல வெற்றிகரமான கேப்டனும் தேவைப்படுவார்கள். அப்படி பார்த்தால், தோனிக்கு நிகரானவர் இங்கு யாரும் இல்லை. ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனி,
ஒவ்வொரு ஆண்டும் தன் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல தவறியதில்லை. மூன்று முறை சென்னை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ள தோனியை தவிர சேப்பாக்க பிட்ச்சின் தன்மையை புரிந்துகொள்ள யராலும் முடியாது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன்களான தினேஷ் கார்திக்கும் அஸ்வினும் சென்னையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் ஐபிஎல் கேப்டனாக சென்னை மைதானத்தில் அதிக வெற்றி பெற்றது தோனி தான். இங்கு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.