ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதை தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி உலகின் நம்பர்-1 ஓடிஐ அணியாக இந்தியா நிகழும் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான ஆட்டத்திறனால் ஆஸ்திரேலியா 32 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்திய கேப்டன் கோலி ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வீரர்கள் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியில் நாதன் குல்டர் நில்-ற்கு பதிலாக ஜெ ரிச்சர்ட்சன் களமிறங்கினார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய ஆரோன் ஃபின்ச் தனது பழைய ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்தார். க்வாஜா மற்றும் ஆரோன் ஃபின்ச் சரியாக ஸ்ட்ரைக் மாற்றி நிறைய பவுண்டரிகளை விளாசினர். இந்திய அணியின் மிடில் ஓவர் பந்துவீச்சை பார்த்தபோது ஆஸ்திரேலிய அணி எளிதாக 350 ரன்களை கடந்து விடும் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலிய அணி 193 என்ற அதிக பார்ட்னர் ஷிப்புடன் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஒரு முனையில் இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிய, விராட் கோலி வழக்கம்போல தனது சிறப்பான ஆட்டத்தை விளையாடி வந்தார். தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோர் விராட் கோலியுடன் சிறிது நேரம் பார்ட்னர் ஷிப் செய்தாலும், முழு பங்களிப்பை வெளிபடுத்தாமல் ஆட்டமிழந்தனர். மற்றுமொரு சேஸிங்கை செய்யும் நோக்கில் விளையாடி வந்த இந்திய கேப்டன் விராட் கோலி தனது 41வது சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். இவரின் சிறப்பான முயற்சி இருந்தும் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாம் இங்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான 3 காரணங்களை காண்போம்.
#3 ஆஸ்திரேலியாவின் சிறப்பான தொடக்க பார்ட்னர் ஷிப்
கடைசி சில மாதங்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணியின் தொடக்க ஆட்டக்காரர்களை முதல் பவர்பிளே ஓவரிலே வீழ்த்தி விடுவர். களத்தில் நீண்ட நேரம் அவர்களை விளையாட விடாமல் குறைந்த ரன்களிலே அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தி வெளியேற்றி விடுவர். ஆனால் இன்றைய போட்டியில் முகமது ஷமி-ஜஸ்பிரிட் பும்ரா இதனை சரியாக செய்யவில்லை.
கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த ஆரோன் ஃபின்ச் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஃபின்ச் மற்றும் உஸ்மான் க்வாஜா சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. சரியாக ஸ்ட்ரைக் செய்து எளிதாக வந்த பந்தை மட்டும் அதிரடியாக விளையாடி வந்தனர்.
வேகப்பந்து வீச்சில் விக்கெட் எடுக்க தவறினாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர். ஆனால் குல்தீப் யாதவ், ஜடேஜா, கேதார் ஜாதவ் ஓவரிலும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் எவ்வித இடர்பாடின்றி ரன்களை குவித்து சிறப்பாக விளையாடினர். இந்திய பந்துவீச்சும் சரியாக சோபிக்கவில்லை.