இங்கிலாந்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் முடிந்ததிலிருந்தே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தரமான இந்திய அணியை உருவாக்கி கொண்டிருக்கிறது, பிசிசிஐ. அதுவும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒத்துழைப்பு தரும் வகையில் செயல்படக் கூடிய பந்துவீச்சாளர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தேடி வருகிறது. இத்தகைய பொறுப்பிற்கு மிகச்சிறந்த தேடலாக அமைந்துள்ளார், தீபக் சாஹர். கடந்த இரு ஐபிஎல் தொடர்களிலும் சென்னை அணிக்காக இடம்பெற்ற சிறப்பாக விளையாடி வரும் இவர், உள்ளூர் போட்டிகளிலும் ஓரளவுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார். இதன் காரணமாக, தற்போது நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணத்திலும் இணைந்து கடைசி டி20 போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற்று 3 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார், தீபக் சாஹர். இனிவரும் காலங்களில் ஒரு மிகச் சிறந்த இந்திய அணியை உருவாக்கும் நோக்கத்தில பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளது, இந்திய அணி நிர்வாகம். அப்படி பல்வேறு வீரர்கள் ஒரு சில போட்டிகளில் தங்களை நிரூபித்தாலும், தொடர்ந்து இந்திய அணியில் தீபக் சாஹர் பயணிக்க வேண்டிய காரணங்களைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட்:
ஆட்டத்தின் துவக்க ஓவர்களை தமது அபார ஸ்விங் பந்து வீச்சின் மூலம் வெளிப்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார், தீபக் சாஹர். ஐபிஎல் தொடரிலும் கூட இந்த பவர் பிளே நேரங்களில் இவரின் பந்துவீச்சு சாதனை போற்றத்தக்கது. ஏனெனில், ஆட்டத்தின் துவக்க ஓவர்களை அச்சுறுத்தும் வகையில் வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார். அதே பாணியை கடந்த மூன்றாவது டி20 போட்டியிலும் வெளிப்படுத்திய தீபக் சாஹர், அதில் வெற்றியும் கண்டு 3 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்த்து டெஸ்ட் போட்டிகளிலும் இவர் தனது சாதனையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களிலும் இவர் தொடர்ந்து பயணிக்க இயலும்.
#2.லோவர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் திகழும் தீபக் சாஹர்:
ஐபிஎல் தொடர்களில் அவ்வப்போது லோவர் ஆர்டர் பேட்டிங் வரிசையில் களமிறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார், தீபக் சாஹர். சிறந்த லாங் பால் ஹிட்டரான தீபக் சாஹர், தற்போதைய இந்திய அணிக்கு தேவைப்படும் டெய்ல் என்டராக உருவெடுப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்திய அணியில் எட்டாவது அல்லது ஒன்பதாவது வரிசையில் களமிறங்கி ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை திறம்பட சமாளித்து ரன்களை குவிக்கும் திறன் பெற்றுள்ளார், தீபக் சாஹர். தற்போதைய இந்திய அணியில் மிடில் ஆர்டர் வரிசை அவ்வப்போது சரிவர செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக அடுத்த கட்ட பேட்ஸ்மேன்களான பந்துவீச்சாளர்களுக்கு சற்று வேலைப்பளு கூடுதலாகிறது. புவனேஸ்வர் குமாரை தவிர வேறு எவரும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும் வீரராக அமையவில்லை. அணியில் இடம் பெற்றுள்ள மற்ற பந்துவீச்சாளர்களான யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் விரைவிலேயே தங்களது விக்கெட்களை இழந்து அணிக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்து வருகின்றனர். எனவே ஆட்டத்தில் ஏழாம் விக்கெட்டை இந்திய அணி இழந்த பிறகும் கூட, நிலவும் பிரச்சனையை சரிக்கட்டும் விதத்தில் தீபக் சாஹர் செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
#3.புவனேஷ்வர் குமாருக்கு சிறந்த மற்றாகும் சாஹர்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தரப்பு ஒற்றை விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு சிறந்த ஒத்துழைப்பு அளிக்கும் பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமார் திகழ்கிறார். இருப்பினும், இனிவரும் காலங்களில் இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமார் சிறப்பாக ஒத்துழைப்பு அளிப்பார் என்று தெளிவாக கூறி விட முடியாது. வெளிநாட்டு சீதோசன நிலைகளில் பெருமளவில் புவனேஸ்வர் குமாரை மட்டுமே நம்பி இருப்பது இந்திய அணிக்கு நல்லது அல்ல. அவர் சிறப்பாக செயல்பட்டாலும் கூட அவரைப் போலவே அதிக விக்கெட்களை கைப்பற்றும் மாற்று பந்து வீச்சாளர் ஒருவர் அணிக்கு தற்போது தேவைப்படுகிறார். இந்த குறையை போக்கும் நோக்கத்தில், தீபக் சாஹர் அணிந்து இணைக்கப்பட்டால் தனது செயல்பாட்டை துல்லியமாக வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் விலகினாலும் கூட தீபக் சாஹர் அவரின் இடத்தை நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆட்டத்தின் போக்கு மற்றும் மைதான விவரங்களை நன்கு அறிந்து செயல்பட கூடியவரான சாஹர் நேரத்திற்கு தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ளும் திறனை படைத்தும் உள்ளார். இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இன்றளவும் புவனேஸ்வர் குமார் உள்ளபோதிலும் தீபக் சாஹரை கூடுதலாக களம் இறக்கினால், இனிவரும் காலங்களில் இந்திய அணிக்கு இது மிகப்பெரும் நன்மையை அளிக்கும்.