உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சில ஆச்சரியங்களுடன் நேற்று அறிவித்தது. இளம் வீரரான ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அனுபவம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை அணியில் இணைத்து பிசிசிஐ அனைவரையும் திடுக்கிட செய்தது. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கை 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்த உலகக் கோப்பை தொடரில் தான் அணியில் இணைத்துள்ளது, பிசிசிஐ. 2017 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின்னர், இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுவரும் அம்பத்தி ராயுடு சிறந்ததொரு பேட்டிங் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
மேலும், கே.எல்.ராகுல் ஒரு மாற்று தொடக்க வீரராகவும் ரவிந்திர ஜடேஜா ஒரு மாற்று சுழற்பந்து வீச்சாளராகவும் விஜய்சங்கர் ஒரு மாற்று ஆல்ரவுண்டராகவும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆகவே, இந்த 15 பேர் கொண்ட இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான மூன்று காரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்
#1.டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன்கள்:
கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கலக்கி வருகின்றனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் விராத் கோலியை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், அணியின் வெற்றிக்கு தனியாளாக வழி நடத்திச் சென்றுள்ளனர். இவர்களின் தொடர்ச்சியான ஆட்ட திறனால் மீதமுள்ள பேட்ஸ்மேன்களின் பணிச்சுமை குறைக்கப்படுகிறது. இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் அணிக்கு ஒரு சிறந்த ஒரு தொடக்கத்தை மட்டும் அளித்திடாமல், தங்களது ஸ்கோரை சதங்களாக மாற்றி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் இவர்கள் ஆட்டத்தில் நிலைத்து நின்று விட்டால் இந்திய அணியின் வெற்றியை எந்த ஒரு எதிரணியினரும் தடுத்திட முடியாது என்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம். உலக கோப்பை தொடரில் இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், ஒரு மாற்று வீரராக அணியில் கே.எல்.ராகுல் உள்ளார் என்பது திருப்திகரமான விஷயமாகும்.
#2.அற்புதங்களை நிகழ்த்தும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள்:
2017 சாம்பியன் டிராபி தொடருக்கு பின்னர் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறார்கள், இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் மற்றும் சாஹல். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாவிட்டாலும் இவர்களின் ரிஸ்ட் ஸ்பின்னுக்கு எவ்வகையான ஆடுகளமும் கைகொடுக்கும். உண்மையில், ஒரு சிறந்த கைதேர்ந்த பேட்ஸ்மேனும் கூட இவர்களின் பந்துவீச்சுக்கு இரையாவார்கள். ஒரு சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர் எந்த ஒரு கேப்டனுக்கும் துருப்புச்சீட்டாக விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதன் காரணமாகவே மிடில் ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்களை வீழ்த்தி எதிரணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கின்றனர், குல்தீப் யாதவ் மற்றும் மற்றும் சாஹல் இணை. இதனால், டெத் ஓவர்களில் பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி இல்லாமல் ஆட்டம் சுலபமாக முடிந்துவிடுகிறது. எனவே, இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்தில் தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#3.எதிரணியை நிலைகுலையச் செய்யும் வேகப்பந்து வீச்சு:
அனைத்து கால கிரிக்கெட்டிலும் இந்திய அணி பேட்டிங்கில் தனி திறனை படைத்துள்ளது. அதே வேளையில், பவுலிங்கில் குறிப்பாக வேகப்பந்துவீச்சில் தடுமாறி வந்த இந்திய அணிக்கு தற்போது ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்துள்ளனர். அணியில் இடம் பெறப்போகும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை பெற்று உள்ளனர். அதுவும், இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா குறுகிய கால கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை தனது அசாத்திய பவுலிங்கால் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் புதிய பந்தில் கூட சாதாரணமாக விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்.
அதேபோல், கடந்த 12 முதல் 18 மாதங்களில் முகமது சமி தனது அபார ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி அந்த காயத்தில் இருந்து மீண்டு எழுந்து தனது அசாத்திய பந்துவீச்சால் தேர்வாளர்களை கவர்ந்துள்ளார். தனது விடாமுயற்சியால் இந்த உலகக்கோப்பை அணியில் இணைந்துள்ளார் சமி. இங்கிலாந்தில் உள்ள ஆடுகள தன்மைகளுக்கு ஏற்ப பந்து வீசும் பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றிருப்பது கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள அனைத்து மைதானங்களும் வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகின்றன. இதனால், சிறந்த பவுலர்களை கொண்டுள்ள இந்திய அணி நிச்சியம் உலக கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.