முறியடிக்கப்பட்ட சச்சினின் சாதனைகள்

Sachin Tendulkar
Sachin Tendulkar

நிலையானது எவையும் இல்லை என்பது சாதனைகளுக்கும் பொருந்தும். ஒருவர் செய்த சாதனை மற்றொருவரால் முறியடிக்கப்படுவது இயற்கையே. ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் ஏராளம். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்தவர், அதிக அரைசதங்கள் (96) அடித்தவர், அதிக ரன்கள் (18,426) அடித்தவர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.

இருப்பினும், முன்பு கூறியது போல நிலையானது எவையும் இல்லை என்பதால் இந்த சாதனைகள் நீண்ட காலம் நிலைபெற சாத்தியமில்லை. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.

#3. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் - ரோஹித் சர்மா முறியடித்தார் (2018) :

Rohit Sharma Virat Kohli
Rohit Sharma Virat Kohli

சச்சின் டெண்டுல்கர் 2012 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் லிட்டில் மாஸ்டர். ஆனால், அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, 2018ல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 152* ரன்கள் எடுத்த பொழுது, அது அவருக்கு ஆறாவது 150+ ஸ்கோராக அமைந்தது. எனவே, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்னும் சச்சினின் சாதனையை முறியடித்தார், ரோஹித் சர்மா.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் அதிக முறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் உடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா, இதுவரை ஏழு முறை 150 ரன்களுக்கு மேல் கடந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

#2. ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர்- விராட் கோலி முறியடித்தார் (2018):

Fastest to 10,000 runs in ODI cricket
Fastest to 10,000 runs in ODI cricket

2001 ஆம் ஆண்டு மார்ச்சில் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 10,000 ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு 259 போட்டிகள் தேவைப்பட்டன. 17 வருடங்கள் கழித்து, 2018 அக்டோபர் 24ஆம் நாள், வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்னும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, விராத் கோலி முறியடித்தார்.

இந்த மைல்கல்லை எட்ட விராத் கோலி வெறும் 205 போட்டிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இது பத்தாயிரம் ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட போட்டிகளை விட 54 போட்டிகள் குறைவு. ஆகவே, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

#1. சேஸிங்கில் அதிக சதங்கள்- விராட் கோலியால் முறியடிக்கப்பட்டது (2017):

Most ODI hundreds in chases - broken by Indian Captain Virat Kohli during the year 2017
Most ODI hundreds in chases - broken by Indian Captain Virat Kohli during the year 2017

சச்சின் டெண்டுல்கர், சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். சேஸிங்கில் இதுவரை 232 போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் அடித்துள்ளார். இதுவே நீண்ட நாட்களாக உலக சாதனையாக இருந்தது. ஆனால், 2017 ஜூலை 6 இல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் விராத் கோலி 111* ரன்கள் எடுத்தார். இது அவருக்கு சேஸிங்கில் 18வது சாதகமாக அமைந்தது. இதன் மூலம், சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்னும் சச்சினின் சாதனையை பின்னுக்குத் தள்ளி , விராத் கோலி புதிய சாதனையைப் படைத்தார்.

சச்சின் டெண்டுல்கர், சேஸிங்கில் 17 சதங்கள் அடிப்பதற்கு 232 போட்டிகள் ஆகின. சச்சினின் அந்த சாதனையை முறியடிப்பதற்கு விராட் கோஹ்லிக்கு வெறும் 102 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டன. சேஸிங் மன்னனாக கருதப்படும் விராத் கோலி, இதுவரை 25 சதங்களை சேஸிங்கில் அடித்துள்ளார். இதனால், சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தற்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதுபோன்று, சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் முறியடிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. எனினும், சச்சினின் சாதனைகளை இந்திய வீரர்கள் முறியடிக்கின்றனர் என்பதை எண்ணும்போது சற்று ஆறுதல் அளிக்கிறது.

Quick Links

App download animated image Get the free App now