இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. முதலில் டி20 தொடரில் களமிறங்கிய இந்திய அணி , முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியதால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தொடரின் கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் தொடங்க உள்ளது.பல கிரிக்கெட் வல்லுனர்கள் இந்தியாவிற்கே பெரும்பாலான வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் சில ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா இந்தத் தொடரை எளிதில் கைப்பற்றும் என்று ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் உந்துகோலாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக தடையில் உள்ளனர். கடந்த வாரம் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு வார்னர் மற்றும் ஸ்மித் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அம்மனுவை நிராகரித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். அவர்கள் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, முதன்மையான அணி போல் விளையாடவில்லை எனப் பலரும் விமர்சித்தனர். 4-1 என இங்கிலாந்திடம் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரில் சில நல்ல விஷயங்களும் அரங்கேறின. அதாவது இந்திய அணியின் பந்துவீச்சு, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இந்திய பந்துவீச்சாளர்கள் மாற்றங்களைப் புகுத்தி திறம்பட பந்துவீசினர். அதேபோல் ஆஸ்திரேலியாவிலும், இந்தியா அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பவுலிங்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
அந்தத் தொடருக்கு பின், இந்திய மண்ணில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியா எளிமையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள இளம் ஆஸ்திரேலிய அணி, அனுபவம் இல்லாமல் இருந்தாலும் சொந்த மண்ணில் ஆடுவதால் அவர்களை குறைத்து மதிப்பிட இயலாது. மேலும் வார்த்தை சண்டைக்கு (sledging) அவர்களிடம் அளவே இருக்காது.
எனவே, ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி இங்கு காண்போம்.
#3. பௌலிங்கில் அசத்த வேண்டும்
அந்நிய மண்ணில் இந்தியாவின் பௌலிங் சற்று மந்தமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்தியா அதை தகர்த்துக் காட்டியது. அதே உத்வேகத்தை ஆஸ்திரேலியாவில் இந்திய பவுலர்கள் செயல்படுத்தினால் இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், இந்திய தேர்வு குழு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. அதில் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளார்.
வேகப்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு நிகராக உள்ளது என்றே கூறலாம். இந்திய அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ராஹ், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.