சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் சாதனை என்பது ஒட்டுமொத்த ரசிகர்களால் எப்பொழுதும் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில், அந்த குறிப்பிட்ட போட்டியில் இடம்பெற்ற மற்றவர்களைக் காட்டிலும் இவர்களின் பங்களிப்பு சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் புதிய பல சாதனைகளை மேற்கொள்ளும் இத்தகைய வீரர்கள் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பெறுகின்றனர். அவற்றில் குறிப்பிடும் வகையில், இவ்வகை வீரர்களின் தனிப்பட்ட ஆட்டத்தால் எதிரணியின் வெற்றி பலமுறை கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட போட்டிகளில் ஒட்டுமொத்த எதிரணியினர் குவித்த ரன்களை காட்டிலும் தனிப்பட்ட வீரர்களின் ரன்கள் சற்று கூடுதலாகும். இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை 33 முறை இந்திய வீரர்கள் குவித்துள்ளனர். எனவே, அவ்வாறு நினைவு கூறத்தக்க வகையில் செயல்பட்ட 3 இந்திய வீரர்களை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.ரோகித் சர்மா:
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி அந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சரமாரியாக தாக்கி ருத்ர தாண்டவம் ஆடினார். இந்த இன்னிங்சில் 20 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட மொத்தம் 162 ரன்கள் ரோஹித் சர்மாவால் குவிக்கப்பட்டது. அற்புதமாக சதம் விளாசிய ரோகித் சர்மா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு உடன் இணைந்து சரவெடி தாக்குதலைத் தொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 367 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை மிரட்டியது. இதன் பின்னர், இரண்டாம் இன்னிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 153க்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் இளம் வீரரான கலீல் அஹமது வீசிய 5 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை அள்ளி இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தரப்பில், கேப்டன் ஹோல்டர் மட்டுமே அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். முதலாவது இன்னிங்சில் ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் சர்மா குவித்த 162 ரன்களை காட்டிலும் ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் குறைவாகவே குவித்தது.
#2.சச்சின் டெண்டுல்கர்:
2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்னும் தனிப்பட்ட சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் அந்த தொடர் முழுக்க 673 ரன்கள் குவித்திருந்தார். அவற்றில் ஒரு சதமும் ஆறு அரை சதங்களும் அடக்கமாகும். அதுமட்டுமல்லாமல், தொடர்நாயகன் விருதையும் இவரே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றில் அபாரமாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியை இறுதிப் போட்டி வரை தமது அபார ஆட்டத்தால் அழைத்துச்சென்றார், சச்சின் டெண்டுல்கர். நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 151 பந்துகளில் 152 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். இவரின் அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி 311 ரன்களை எட்டியது. இதன் பின்னர், களமிறங்கிய நமீபியா அணி இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 130 ரன்களுக்கு வீழ்ந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் யுவராஜ் சிங் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். நமீபியா அணியின் எந்த ஒரு பேட்ஸ்மேன் கூட 30 ரன்களை தாண்டவில்லை. இந்த அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரை விட டெண்டுல்கர் 22 ரன்கள் கூடுதலாக குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#1.ரோகித் சர்மா:
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி இந்திய அணியின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ரோஹித் சர்மா, இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். அவர்களின் பந்துவீச்சில் மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்து 264 ரன்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் எனும் தமது சாதனையை முறியடித்தார். இந்த அசுரத்தனமான இன்னிங்சில் 33 பவுண்டரிகளும் ஒன்பது சிக்சர்களையும் ரோகித்சர்மா குவித்தார். இவரின் இரட்டை சதம், விராட் கோலியின் அரைசதம் ஆகியவற்றின் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 404 ரன்களைக் குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் மட்டும் தனி ஒரு ஆளாக 75 ரன்களை குவித்து போராடினார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதுமட்டுமல்லாது, ரோகித் சர்மா குவித்த 264 ரன்களை காட்டிலும் இலங்கை அணி 23 ரன்கள் குறைவாகவே குவித்தது. அதன் காரணமாகவே, இப்பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.