#1.ரோகித் சர்மா:
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி இந்திய அணியின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ரோஹித் சர்மா, இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். அவர்களின் பந்துவீச்சில் மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்து 264 ரன்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் எனும் தமது சாதனையை முறியடித்தார். இந்த அசுரத்தனமான இன்னிங்சில் 33 பவுண்டரிகளும் ஒன்பது சிக்சர்களையும் ரோகித்சர்மா குவித்தார். இவரின் இரட்டை சதம், விராட் கோலியின் அரைசதம் ஆகியவற்றின் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 404 ரன்களைக் குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் மட்டும் தனி ஒரு ஆளாக 75 ரன்களை குவித்து போராடினார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதுமட்டுமல்லாது, ரோகித் சர்மா குவித்த 264 ரன்களை காட்டிலும் இலங்கை அணி 23 ரன்கள் குறைவாகவே குவித்தது. அதன் காரணமாகவே, இப்பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.