ஐபிஎல்-இல் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத 3 புகழ்பெற்ற சர்வதேச வீரர்கள்

ஸ்டுவர்ட் பிராட்
ஸ்டுவர்ட் பிராட்

உலகின் மிகவும் பிரபலமான டி20 தொடர்களில் ஒன்று ஐபிஎல். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் ஆரம்பம் முதலே அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது. இந்தியா மட்டும் இல்லாமல் பல வெளிநாடுகளிலும் இதன் புகழ் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு முக்கியமான ஒரு காரணம், உலகின் பல முன்னணி சர்வதேச வீரர்களுடன் வளர்ந்து வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து விளையாடுவது தான். 2010 ஆம் ஆண்டு வரை அப்போது உச்சத்தில் இருந்த அனைத்து முன்னணி ஜாம்பவான்களும் ஐபிஎல் போட்டிகளில் தங்கள் பங்களிப்பை அளித்தனர்.

இதில் சிலர் தங்கள் பங்களிப்பை வீரர்களாக இல்லாமல் பயிற்சியாளராக, ஆலோசகராக என இன்னமும் ஏதோ ஒரு வகையில் ஐபிஎல் உடன் தொடர்பில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது அனைவரின் கனவு. ஆனால் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏலத்தில் வாங்கப்பட்டு பின்பு ஒரு போட்டியில் கூட களமிறங்க முடியாத சூழ்நிலை சில வீரர்களுக்கு அமைந்துள்ளது. அப்படிபட்ட புகழ் பெற்ற 3 சர்வதேச வீரர்களை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

#3 பிரண்டன் டெய்லர்

பிரண்டன் டெய்லர்
பிரண்டன் டெய்லர்

ஜிம்பாப்வே அணியின் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான இவர், இதுவரை ஒரு ஐபிஎல் போட்டிகளில் கூட ஆடியது இல்லை.தனியாளாய் போராடி வென்று தர கூடிய ஆற்றல் மிக்க டெய்லர் தற்போதும் ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஐபிஎல் அல்லாது வேறு டி20 தொடர்களில் பங்கேற்றுள்ள டெய்லர், கவுண்டி அணிக்காகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஹைதெராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட டெய்லர், அந்த சீசன் முழுவதுமே வாய்ப்பில்லாமல் வெளியில் அமர்ந்திருந்தார். இதன் பிறகு எந்த சீசனிலும் இவரை யாரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை.

#2 தமீம் இக்பால்

தமீம் இக்பால்
தமீம் இக்பால்

பங்களாதேஷ் அணி வீரரான இவர், தொடக்க ஆட்டக்காரராக பல சர்வதேச ரன்களை குவித்துள்ளார். எப்போது பங்களாதேஷ் அணி முன்னணி தொடர்களில் பங்கு பெற்றாலும், இவரின் பங்களிப்பு மிகவும் பெரிதாக இருக்கும். டி20 போட்டிகளில் விளையாடும் அனைத்து தகுதிகளும் இருந்தாலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கூட கிடைத்ததில்லை. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமீம், இரண்டு சீசனுமே வெளியில் தான் அமர்ந்திருந்தார்.

இதன் பிறகு இவரும் எந்த அணியினராலும் வாங்கப்படவில்லை. இதற்கு மேல் ஐபிஎல் வாய்ப்பு கிடைக்குமா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது . வெறும் 29 வயதேயான தமீம் இக்பால், 75 போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும்.

#1 ஸ்டுவர்ட் பிராட்

ஸ்டுவர்ட் பிராட்
ஸ்டுவர்ட் பிராட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் இவர், தற்போதைய இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க பந்து வீச்சாளர். சகா வீரரான அண்டர்சனுடன் இணைந்து இங்கிலாந்திற்காக 1000 விக்கெட்டிற்கு மேல் எடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் டி20 கேப்டனாகவும் பல போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். 400 டெஸ்ட் விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ள பிராட், ஒரு நாள் போட்டிகளிலும் 178 விக்கெட்கள் எடுத்து தனக்கான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவ்வளவு சாதித்தும் ஒரு ஐபிஎல் போட்டி வாய்ப்பு கூட இவருக்கு அமையவில்லை. 2011 ஆம் ஆண்டு கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கான வீரராக தேர்வான இவர், அந்த சீசன் முழுவதும் விளையாடவில்லை. அதன் பிறகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது ஆல்ரவுண்டர் திறமை நிச்சயம் சில ஐபிஎல் அணிகளுக்கு கைகொடுத்திருக்கும். இருந்தாலும் அதிர்ஷ்டமின்மை காரணமாக போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

Edited by Fambeat Tamil