நூறு கோடி இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்திய அணி முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு படுமோசமாக அமைந்தது. அரையிறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் நம்பிக்கை இழந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் எனப்படும் "பிசிசிஐ" தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட அணியின் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
தற்போது இந்திய அணியின் திறமைமிக்க வீரர்கள் பலர் இருப்பினும் மிடில் ஆர்டரில் சற்று குழப்பங்கள் தொடர்ந்து நீடித்த வண்ணமே இருந்து வருகின்றது. அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாய் இருந்து வந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார துல்லிய தாக்குதலால் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியும் சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடவில்லை.
எனவே, இந்தியாவின் மிகப்பெரிய தலைவலியாக விளங்கும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வெகு விரைவிலேயே வலுசேர்க்க உள்ளது, இந்திய அணி நிர்வாகம். எனவே, இனிவரும் தொடர்களில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை தூக்கி நிறுத்துவதற்கான வாய்ப்புள்ள இளம் வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.சுப்மான் கில்:
கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் "தொடர் நாயகன்" விருதை வென்ற சுப்மான் கில், எதிர்காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் தூணாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார், சுப்மான் கில். இந்த இளம் வீரர் தொடர்ந்து இந்திய ஏ அணியிலும் பயணித்து வருகிறார். இவர் சமீபத்தில் முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கூட நான்கு போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் குவித்துள்ளார். மேலு,ம் இவரது பேட்டிங் சராசரி 66 என்ற வகையிலும் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் அமைந்து சிறப்பாக உள்ளது .வெறும் 19 வயதே ஆன இவர், தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்று வருகிறார். நேற்றைய போட்டியிலும் கூட 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். எனவே, இவரின் அபார வளர்ச்சி இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்து மிடில் ஆர்டர் பற்றாக் குறையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.