கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது அந்த போட்டியினை விளையாடும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உணர்ச்சிகளை தூண்டுகிறது. அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த இடத்தில் இருக்கும் அதில் ஒரு வீரர் அவுட்டாகும் போது ரசிகர்கள் அனைவரும் கதறவும், அதுவே அந்த அணி வெற்றி பெறும் வேளையில் ரசிகர்கள் துள்ளி குதிக்கவும் வைக்கிறது. இந்த போட்டியானது தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்களுக்கே அந்த அளவு உணர்ச்சியை வரவழைக்கிறது என்றால் அதனை மைதானத்திலிருந்து விளையாடும் வீரர்களை அதைவிட பல மடங்கு பாதிக்கும். தங்களது அணி தோல்வியடையும் போது பெரும்பாலான வீரர்கள் அழுவதனை நாம் கண்டதுண்டு. அதே போல தங்களது அணி வெற்றி பெரும் போதும் ஆனந்த கண்ணீராக தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். அந்தவகையில் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத வீரர்களில் டாப் 4 போட்டிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) ஷாகிப் அல் ஹாசன்
ஆசிய கோப்பையின் 11 வது சீசனின் இறுதி போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. லீக் போட்டிகளை பொருத்தவரையில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வெற்றி பெற்றிருந்தன. இதில் முதலில் பேட் செய்த பாக்கிஸ்தான் அணி சர்ப்ராஸ்-ன் அதிரடியில் 50 ஓவர் முடிவில் 236 ரன்கள் குவித்தது. 237 ரன்கள் எடுத்தால் தங்களது முதல் ஆசிய கோப்பையை கைப்பற்றலாம் என்ற நோக்கில் வங்கதேச அணி களமிறங்கியது. நன்றாக துவக்கம் தந்த அந்த அணி இடையில் 83 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அப்போது வந்த ஷாகிப் தனது அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தினார். ஆனால் இறுதியில் சில சொதப்பலின் காரணத்தினால் வங்கதேசம் அந்த போட்டியை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையும். இதன் மூலம் வங்கதேச அணியின் பல வருட கனவானது சில நிமிடங்களில் சுக்குநூறானது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத வங்கதேச அணி வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுதனர். அதிலும் ஷாகிப் அல் ஹாசன் அழுதது இன்றளவும் அந்நாட்டு ரசிகர்கள் மறக்க முடியாததாக உள்ளது.
#2) ஸ்ரீசாந்த்
இந்த சம்பவத்தை பற்றி இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஐபிஎல் தொடரின் முதலாவது சீசனில் 10வது போட்டியில் ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் குவித்தது. அதில் குமார் சங்ககரா அதிகபட்சமாக 94 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய மும்பை அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடையும்.
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஹர்பஜன் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். இது கைகலப்பாக மாற ஹர்பஜன் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் தாக்கிவிடுவார். இதனால் கதறி அழுத ஸ்ரீசாந்த் அப்போது மிகவும் பிரபலமானார்.
#3) தென்னாபிரிக்க அணி
தென்னாபிரிக்க அணி தற்போதுவரை ஒரு ஐசிசி கோப்பைகளை கூட வென்றது கிடையாது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இந்த அணியணியானது நாக் அவுட் போட்டிகள் வந்தால் மட்டும் சொதப்பி விடும். அந்த வகையில் 2015 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 281 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இறுதி கட்டத்தில் எலியட்டின் அபார ஆட்டத்தின் மூலம் போட்டியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும். இந்த போட்டியை பொறுத்தவரையில் தென்னாபிரிக்க அணியே வெற்றி பெரும் நிலையில் இருந்தாலும் கடைசில் ஏற்பட்ட இந்த தோல்வியினால் இம்முறையும் தங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியாத சோகத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் அனைவரும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுது தங்களது ஏக்கத்தினை வெளிப்படுத்துவர். இது இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது.
#4) யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்
2011 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் 28 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதுவும் இறுதி போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த இலங்கை அணியை வீழ்த்தியது. கம்பிர் மற்றும் தோனியின் கூட்டு முயற்சியால் இந்த போட்டியை இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியினை இந்திய அணி மட்டுமல்லாமல் நாடே கொண்டாடியது. இந்த தருணத்தில் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாத ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மைதானத்தில் அழுது தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.