50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பத்து ஆண்டுகள் வழி நடத்திய தோனி 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கேப்டன் பதவியைத் துறந்து கோஹ்லிக்கு வழிவிட்டார். அதற்கு முன்பே 2014 ஆம் ஆண்டு டெஸ்டு போட்டியிலிருந்து ஓய்வு பெற்று கேப்டன் பதவியை ஹோஹ்லியிடம் ஒப்படைத்தார்.
கோஹ்லி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையால் தற்போது மூன்று வகையான போட்டிகளை வழிநடத்தி வருகிறார். பொதுவாக உலக அரங்கில் உள்ள கிரிக்கெட் கேப்டன்கள் தங்களுக்கு பிடித்த அல்லது அதிர்ஷ்டம் வாய்ந்த வீரர்களை ஓவ்வொரு போட்டியிலும் ஆடவைப்பது வழக்கம். பின்னர், அணியின் கேப்டன் மாறினால் அந்த நிலை மாறி நிலையான இடம் பிடிக்கப் போராடுவார்கள். அதே போல இந்திய அணியில் தோனி தலைமையில் நிலையான இடம் பெற்று, தற்போது நிலையான இடம் கிடைக்காத நான்கு வீரர்கள் யார் என்று பார்ப்போம்.
#4 மோஹித் சர்மா
ஹரியானவை சேர்ந்த மிதவேக பந்துவீச்சாளர், இவர் 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காகச் சர்வதேச போட்டியில் அறிமுகமானார் பின்பு இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினர். 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நிரந்தர பந்துவீச்சாளர்.
இவர் இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டி மற்றும் 8 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். மேலும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தலைமையில் ஒரு சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் துல்லியமான பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர். மேலும் இறுதி ஓவர்களைச் சிறப்பாக வீசக்கூடியவர் இவர் தோனியின் கேப்டன் பதவியைத் துறந்தபிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை.
#3 ரவீந்திர ஜடேஜா
இடது கை ஆல்ரவுண்டரான இவர் முன்பு மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் தற்போது அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறுகிறார். இவர் இதுவரை 177 டெஸ்ட் விக்கெட் மற்றும் ஒருநாள் போட்டியில் 155 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவை அனைத்துமே தோனியின் தலைமையில் சாய்த்த விக்கெட்டுகள் ஆகும்.
சவுராஷ்டிராவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் 1196 டெஸ்ட் ரன்களும், 1914 ஒருநாள் போட்டி ரன்களும் சேர்த்துள்ளார். விராத் கோஹ்லி தலைமையேற்ற பின் இவர் வெறும் 9 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். மேலும் இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.
#2 ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர். இவரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளார். நல்ல உயரமான மெலிந்த ஆப் ஸ்பின்னர் இவர், இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். ஆனால், சாஹல் மற்றும் குல்தீப் ஒருநாள் போட்டியில் ஜொலித்த பின்பு இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.
ஜடேஜாவை போல அஸ்வினும் தோனியின் தலைமைக்கு பிறகு வெறும் 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இருந்தாலும், தற்போது டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார் .
#1 சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர். இவர் 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5500 ரன்கள் எடுத்துள்ளார். இருந்தும் இவருக்கு தற்போது அணியில் இடம் கிடைக்காமல் திணறுகிறார். தோனி தலைமையில் அணைத்து போட்டிகளும் விளையாடிய இவர் கடைசியாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இடம் பிடித்தார். பின்பு ஆசியா கோப்பை போட்டியில் கழட்டிவிடப்பட்டார். 31 வயதான இவர் தோனி தலைமையின் போது பேட்டிங், பௌலிங் மற்றும் பில்டிங்கிலும் சிறந்து விளங்கினார். ஆனால் தற்போது கோஹ்லியின் தலைமையில் இந்த இடது கை வீரருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எழுத்து:
மொஹ்சின் காமல்.
மொழியாக்கம்:
லோகேஸ்வரன்