இரு அணிகளுக்கு இடையேயான தொடரில் 0-2 என்ற கணக்கில் இருந்த ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்று தொடரையும் இந்திய மண்ணில் கைப்பற்றியது. 2015 ல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரை இழந்ததில் இருந்து இந்தியா சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது இதுவே முதல் தடவையாகும். உலககோப்பைக்கு முன்னதாக இப்படி ஒரு தொடர் தோல்வியை இந்திய கிரிக்கெட் அணி சந்திப்பது ஆரோக்கியமானதல்ல.
5வது ஒருநாள் போட்டிக்கான கண்ணோட்டம்
ஆரோன் பின்ச், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தார். துவக்க வீரர்களான கவாஜா, பின்ச் இருவரும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். பின்னர் 27 ரங்களுக்கு பின்ச் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கவாஜா அரைசதம் கண்டார். இவருடன் ஜோடி சேர்ந்த ஹேன்ஸ்கோம் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். தனது நிலையான ஆட்டத்தினால் கவாஜா சதம் அடித்து அடுத்த நிமிடமே ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
273 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் களமிறங்கியது இந்திய அணி . கடந்த போட்டியில் சதம் அடித்த தவான் இப்போட்டியில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் கோஹ்லி, பண்ட், விஜய் ஷங்கர் ஆகியோர் குறைந்த ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர். ஒருகட்டத்தில் 132/6 என இந்திய அணி தவித்தது.
பின்னர், ஜோடி சேந்த ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் 7வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் அடுத்தடுத்து இவர்களும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன், 3-2 என தொடரையும் இழந்தது.
தொடரை இந்திய அணி இழப்பதற்கு முக்கிய 4 காரணங்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
#1 ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பாக அமைந்த துவக்க பார்ட்னெர்ஷிப்
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக, 3வது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர்.
அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஓவர்களில் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரிகளை அடித்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு அற்புதமான துவக்கமாக இருந்தது. நிதானமாக ஆடியதால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.
மறுபுறம், கவாஜா தான் மொஹலியில் விட்டுச் சென்ற இடத்திலிருந்து 5வது போட்டியை தொடர்ந்தார். 4வது போட்டியில் தவறவிட்ட சதத்தை டெல்லியில் பூர்த்தி செய்தார். இது தான் அவர்கள் அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைத்திருக்க முடியும்.
உலகக்கோப்பை போட்டிக்கு இந்த துவக்கம் அமைந்தால், ஆஸ்திரேலியா அணி மீண்டும் கோப்பையை வெல்வதில் சந்தேகம் இல்லை.