2018ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் நிறைய இழப்புகள், ஊழல்கள், புதிய திருப்பங்கள், அதிர்ச்சியுட்டும் சில நினைவுகள் போன்றவை அதிகம் நடைபெற்றன.
இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சில் மிகவும் தடுமாறினர் . ஆஸ்திரேலியா அணி ஐசிசி ஓடிஐ, டி20 , டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் அணி டி20 யில் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களும் சர்வதேச போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர். வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகின்றனர்.
ஐசிசி உலகக் கோப்பையானது அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 2018ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட 10 கிரிக்கெட் அணிகளை ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.
தற்பொழுது சில அறிமுக இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு தற்போதைய சர்வதேச தொடர்களில் அணியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த வீரர்களை பற்றி காண்போம்.
#4.கலீல் அகமது - இந்தியா- வயது 20
கலீல் அகமது ஹாங்காங்கிற்கெதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் அறிமுகமானார்.ஆனால் அவருக்கு அறிமுகபோட்டி சிறப்பானதாக அமையவில்லை. பூம்ரா அணிக்கு திரும்பிய பிறகு கலீல் அகமது வெளியேற்றப்பட்டார்.
கலீல் அகமது பந்துவீச்சில் அதிக ரன்களை கொடுத்தார்.பின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சிறந்த இடதுகை பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.கலீல் அகமது 6 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி 24.0 சராசரியை வைத்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 5 ஓவரில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார். இந்திய அணிக்கு சிறந்த இடதுகை பந்துவீச்சாளர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்துள்ளார். நிறைய வீரர்களை அணியில் வைத்து முயற்சி செய்து பார்த்தும் யாரும் சரியாக அமையவில்லை ஆனால் இவருடைய பந்துவீச்சு அணைவரையும் கவர்ந்துள்ளது.
கலீல் அகமது 2018 ல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடியதால் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
#3.பிரித்வி ஷா- இந்தியா - வயது 19
பிரித்வி ஷா 2013ல் ஹாரிஸ் சீல்ட் எலைட் டிவிசன் போட்டிகளில் 546 ரன்களை விளாசி தன்னை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்திகொண்டார்.இவருடைய ஆட்டத்திறன் மேன்மேலும் வளர்ந்து கொண்டே சென்றது. 2018ல் பிப்ரவரியில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பை வென்று அசத்தினார்.
19-வயது இளம் மும்பை பேட்ஸ்மேன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2018 அக்டோபர் 4ஆம் தேதியில் அறிமுகமானார்.தனது முதல் இன்னிங்சிலேயே சதத்தை விளாசினார். சர்வதேச அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இளம்( 18 வருடம் 329 நாட்கள்) இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அத்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதத்தை விளாசி எளிதாக டெஸ்ட் தொடரை வென்றுகொடுத்தார். அறிமுக டெஸ்ட் போட்டிகளிலேயே தொடர் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.
4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா தன்னை அந்நிய மண்ணில் நிறுபித்தால் அவருடைய இடம் இந்திய டெஸ்ட் அணியில் சீல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2. ஷாகின் ஷா அப்ரிடி - பாகிஸ்தான் - வயது 18
ஷாகின் ஷா அப்ரிடி 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டார். 6 அடி உயரமுள்ள வேகப்பந்து வீச்சாளரான இவர் தொடர்ச்சியாக 90 எம்.பி.எச்(miles per hour ) வேகத்தில் பந்துவீச ஏற்ற திறன் பெற்றுள்ளார்.இவர் சர்வதேச போட்டிகளில் செப்டம்பர் 18, 2018ல் நடைபெற்ற ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிற்கெதிராக சேக் சயத் ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார்.இவர் 6 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு கட்டுப்படுத்த இயலாத வீரராக திகழ்கிறார். தற்போது பாக்கிஸ்தான் ஆடி வரும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் இவருடைய பந்துவீச்சு அமைந்துள்ளது .
நியூசிலாந்திற்கெதிரான ஒருநாள் போட்டிகளில் 3 போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருடைய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. இவர் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார்.2019 உலகக்கோப்பையில் இவருடைய பந்துவீச்சு உலகின் முன்னணி வீரர்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.சாம் குரான் - இங்கிலாந்து - வயது 20
சாம் கர்ரன் இந்தியாவிற்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் கிரிக்கெட் எழுத்தாளர்கள் கிளப்பில் இருந்து " இந்த வருடத்தின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் " என்ற விருதினையும் பெற்றுள்ளார்.சாம் கர்ரன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தனது இடத்தை நிரந்தராமாக்கியுள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டியிலும் நிறுவ முயற்சித்து வருகிறார்.சாம் கர்ரன் சர்வதேச போட்டிகளில் ஜனவரி 2018ல் நடைபெற்ற ஆஸ்த்ரெலியா மற்றும் நியூசிலாந்திற்கெதிரான டிரை- சீரிஸில் அறிமுகமானார். அதன்பின் இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் தொடர் இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்து 4-1 என டெஸ்ட் தொடரை வெல்வதற்கு மிகப்பெரிய காரணமாக சாம் குரான் இருந்தார்.இவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 272 ரன்களையும் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் தனிஒருவராக நின்று 5 டெஸ்ட் போட்டிகளில் 2 டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்துள்ளார்.
இடதுகை பேட்ஸ்மேன் சாம் கர்ரன் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்து "தாம் டெஸ்ட் பிளேயர் மட்டுமல்ல " என தன்னை நிறுபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.