சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அடித்து விளையாடுவது என்பது கடினமான ஒன்றாகும். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பல அதிரடி வீரர்கள் உள்ளனர். அந்த அதிரடி வீரர்கள் கூட, டெஸ்ட் போட்டியில் நிதானமாகத்தான் விளையாடுவார்கள். அடித்து விளையாட நினைத்தால் தனது விக்கெட்டை இழக்க நேரிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவற்றையும் தாண்டி, ஒரே ஓவரில் அதிரடியாக 4 சிக்சர்களை விளாசிய வீரர்களும் உள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஏபி டி வில்லியர்ஸ்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு வீரரான ஏபி டி வில்லியர்ஸ். இவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஆவார். ஏபி டி வில்லியர்ஸ் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்க கூடிய திறமை படைத்தவர். அதனால்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை செல்லமாக “மிஸ்டர் 360” என்று அழைத்து வருகின்றனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய ஒரே வீரர் இவர்தான். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதினர்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளரான மெக் டொனால்ட் வீசிய ஓவரை, வெளுத்து வாங்கிய ஏபி டி வில்லியர்ஸ், 6 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசினார். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 163 ரன்கள் விளாசினார். ஏபி டி வில்லியர்ஸ் ஏற்கனவே அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) கபில் தேவ்
ஒரு காலகட்டத்தில் நமது இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கபில் தேவ். இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடியவர். 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதினர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹெம்மிங்ஸ் வீசிய ஓவரில், அதிரடியாக விளையாடிய கபில் தேவ் 6 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசினார். கபில் தேவ் இந்த டெஸ்ட் போட்டியில் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ஷாஹித் அப்ரிடி
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் சிக்ஸர் அடிப்பதில் பெயர் போன ஷாகித் அப்ரிடி. இவர் பாகிஸ்தான் அணியை சேர்ந்தவர். இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தியவர். ஒரு காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினர். இந்த போட்டியில் நமது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வீசிய ஓவரை, வெளுத்து வாங்கிய அப்ரிடி, 6 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசினார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் அப்ரிடி 103 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்களையும், ஒருநாள் போட்டிகளில் 351 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.