கிரிக்கெட் பேட்டிகளின் வரலாற்றிலேயே சிறந்த தொடராக பார்க்கப்படுவது உலககோப்பை தொடர் தான். 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலககோப்பை தொடரானது எட்டு அணிகளுடன் துவங்கப்பட்டது. தற்போது வரை 11 உலககோப்பை தொடர்களில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 5 முறை கோப்பையை வென்று சிறந்த அணியாகத் திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி தலா இருமுறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதர ஆசிய அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளனர். இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் கோப்பை வெல்வதை நோக்கமாக கொண்டு களமிறங்குகின்றன. ஆனால் இந்த வரிசையில் நான்கு அணிகள் மட்டும் ஒரு போட்டியாவது வெல்ல வேண்டும் என்ற நேக்கில் விளையாடி கடைசி வரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் உள்ளன. அத்தகைய அணிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#4) ஸ்காட்லாந்து
இந்த பட்டியலில் உள்ள அணிகளிலேயே அதிக போட்டிகள் விளையாடிய அணி ஸ்காட்லாந்து தான். 1999 முதல் உலககோப்பை தொடரில் அறிமுகமான ஸ்காட்லாந்து 2015 உலககோப்பை வரை உள்ள தொடர்களில் விளையாடியுள்ளது. அதில் 14 போட்டிகளில் பங்கேற்ற இந்த அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி போட்டியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை மூன்று உலககோப்பை தொடர்களில் பங்கேற்ற ஸ்காட்லாந்து அணி அனைத்து தொடரிலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது. சமீபத்தில் ஸ்காட்லாந்து அணி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 அணியான இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இருந்தாலும் அந்த அணியால் தற்போதைய உலககோப்பை தொடரில் இடம் பிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் அடுத்த உலககோப்பை தொடருக்கு ஸ்காட்லாந்து அணி தங்களின் திறமையான ஆட்டத்தினால் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3) நம்பியா
ஆப்பிரிக்க நாடான நம்பியா இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்குள் நுழைந்த நம்பியா அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. இந்தியா , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் என பலம் வாய்ந்த அணிகளின் குரூப்-ஏ வில் நம்பியா அணியும் சேர்க்கப்பட்டது. உலககோப்பை தொடரில் பங்கு பெறுவதற்கு முன்னர் வங்கதேசம் அணியை வீழ்த்தியிருந்தது நம்பியா. ஆனால் அந்த உலககோப்பை தொடரில் தான் மோதிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது அந்த அணி. அதில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியும் அடைந்திருந்தது. அதன் பின்னர் டி20 போட்டிகளில் சிறந்த அணியாக உருவாகி வருகிறது நம்பியா. இருந்தபோதிலும் அடுத்த உலககோப்பை தொடருக்காவது இந்த அணி தகுதி பெறுகிறதா என்பதை காத்திருந்து பார்ப்போம்.
#2) பெர்முடா
பெர்முடா அணியானது 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. அந்த ஆண்டு உலககோப்பை தொடரானது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடத்தப்பட்டதால் அங்கு பெர்முடா அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் அந்த தொடரில் தான் மோதிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து வெளகயேறியது பெர்முடா. அதிலும் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே இலங்கை அணிக்கு எதிராக 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதன் அடுத்த போடாடியில் இந்திய அணியால் 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது பெர்முடா. அதில் தனது கடைசி போட்டியிலும் வங்கதேச அணி பெர்முடாவை 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
#1) கிழக்கு ஆப்ரிக்கா
கிழக்கு ஆப்ரிக்கா என்ற அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட உலககோப்பை தொடரில் கிழக்கு ஆப்ரிக்கா அணிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த அணி அந்த தோடரில் சோபிக்கத் தவறியது. அந்த உலககோப்பை தொடரில் கிழக்கு ஆப்ரிக்கா அணியானது இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் குரூப் ஏ-வில் சேர்க்கப்பட்டது. அதில் துவக்க போட்டியிலேயே இந்திய அணி கிழக்கு ஆப்ரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து நாடு திரும்பியது கிழக்கு ஆப்ரிக்கா அணி. 1989 ஆம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்கா அணியானது கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டது. இறுதியில் அந்த இடத்தை கென்யா அணி பிடித்தது.