இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடும் ஒரு தொடர் தான், உலக கோப்பை தொடர். இந்த உலக கோப்பை தொடர் ஆனது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் 400+ ரன்கள் அடித்த அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ( 2015 ஆம் ஆண்டு )
ஆஸ்திரேலியா – 417/6 ( 50 ஓவர்கள் )
ஆப்கானிஸ்தான் – 142/10 ( 37.3 / 50 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பின்ச் வெறும் 4 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
வெளுத்து வாங்கிய டேவிட் வார்னர், 133 பந்துகளில் 178 ரன்கள் விளாசினார். இதில் 19 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும், அடங்கும். ஸ்டீவன் ஸ்மித் 95 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் சிக்சர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 39 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்தது.
418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. உஸ்மான் காணி மற்றும் ஜாவெட் அகமடி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த நாவ்ரோஸ் மங்கல், நிதானமாக விளையாடி 33 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவிலேயே அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 37 அவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்து படு தோல்வி அடைந்தது.
#2) இந்தியா Vs பெர்முடா ( 2007 ஆம் ஆண்டு )
இந்தியா – 413/5 ( 50 ஓவர்கள் )
பெர்முடா – 156 ( 43.1 / 50 ஓவர்கள் )
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பெர்முடா அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சவுரவ் கங்குலி மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்பு சேவாக் மற்றும் கங்குலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய சேவாக் 87 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். சவுரவ் கங்குலி 89 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங், 46 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்கள் குவித்தது.
414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் பெர்முடா அணி களமிறங்கியது. பெர்முடா அணியில் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய டேவிட் ஹெம்ப் மட்டும், 76 ரன்கள் விளாசினார். இறுதியில் பெர்முடா அணி 43 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 156 ரன்கள் மட்டுமே அடித்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அணில் கும்ப்ளே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.