சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற வீதம், இந்த உலக கோப்பை தொடர் ஆனது வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் 400+ ரன்கள் அடித்த அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) தென் ஆப்பிரிக்கா Vs அயர்லாந்து ( 2015 ஆம் ஆண்டு )
தென் ஆப்பிரிக்கா – 411/4 ( 50 ஓவர்கள் )
அயர்லாந்து – 210/10 ( 45 / 50 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹாஷிம் அம்லா மற்றும் டி காக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டி காக் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த டு பிளசிஸ் மற்றும் ஹாஷிம் அம்லா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினர்.
நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடிய டு பிளசிஸ், 109 ரன்கள் விளாசினார். இறுதிவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்லா, 128 பந்துகளில் 159 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது.
412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. போர்டர்பீல்ட் மற்றும் ஸ்டிர்லிங் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாடிய பால்பிர்னி, 58 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவிலேயே அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் அயர்லாந்து அணி 45 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 210 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே தென் ஆப்பிரிக்கா அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியில் சிறப்பாக பந்து வீசிய அபோட், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
#2) தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2015 ஆம் ஆண்டு )
தென் ஆப்பிரிக்கா – 408/5 ( 50 ஓவர்கள் )
வெஸ்ட் இண்டீஸ் – 151/10 ( 33.1/50 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடியாக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ், 66 பந்துகளில் 162 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ரோசோவ், 39 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் குவித்தது.
409 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டுவைன் ஸ்மித் மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய டுவைன் ஸ்மித், 31 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர், 58 ரன்கள் அடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே தென் ஆப்பிரிக்கா அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.