டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளானது நிச்சயம் ஜென்டில்மேன்களின் போட்டியாகவே கருதப்படுகிறது. ஏனெனில், 140 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட சோதிக்கும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உள்ளதாலும் இத்தகைய மதிப்பு இன்றளவும் இருந்துவருகிறது. குறிப்பாக 5 நாட்கள் கொண்ட இந்த நீண்டகால போட்டிகளில் சிறந்த சராசரியை வைப்பது ஒரு பேட்ஸ்மேனின் தலையாய கடமையாகும். உலகமுழுக்க நடைபெறும் இப்போட்டிகளில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி சூழ்நிலைக்குத் தக்கவாறு விளையாடும் பேட்ஸ்மேன்களை தங்களுக்காகவும் தங்களது அணிக்காகவும் பெரும்பாலான வெற்றிகளை குவித்து வருகின்றனர். உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்த ஒரு மிகச்சிறந்த எண் தான் 99.94. ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த டான் பிராட்மேனின் இமாலய சராசரி தான் இவை. இவர் விளையாடியுள்ள 52 டெஸ்ட் போட்டிகளில் என்ற 6996 ரன்களை 99.94 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். அதுவும் தனது கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்னர், 100க்கும் மேல் சராசரியைக் கொண்ட டான் பிராட்மன் எதிர்பாராத விதமாக தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் முறையில் ஆட்டம் இழந்ததால், தனது பேட்டிங் சராசரியில் சற்று வீழ்ச்சி கண்டது. நவீன கால டெஸ்ட் போட்டிகளில் தங்களது அயராத உழைப்பால் தொடர்ந்து பேட்டிங் சராசரியை முன்னேற்ற துடிக்கும் பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். அவ்வாறு, டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ள ஐந்து நிகழ்கால பேட்ஸ்மேன்கள் பற்றி எடுத்துரைக்கிறது இந்த தொகுப்பு.
#5.ஜோ ரூட்:
இங்கிலாந்து அணியின் ஐந்தாம் இடத்தில் களம் இறங்கும் ஜோ ரூட், இதுவரை 151 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பங்கேற்றுள்ளார். தற்போது இங்கிலாந்து அணியை வழிநடத்தி வரும் இவர், 6803 ரன்களை 48.94 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். அவற்றில் 42 அரைசதங்களும் 16 சதங்களும் அடக்கமாகும். தம்மை நோக்கி வரும் பந்தை சிறப்பாக கையாண்டு ஷாட்களை தேர்ந்தெடுக்கும் இவரின் அணுகுமுறை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைகின்றது. 28 வயதே ஆன இவர், இன்னும் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போதிய நேரம் உள்ளது. தொடர்ந்து தமது நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், இங்கிலாந்து அணியின் அடுத்த ஜாம்பவானாக நிச்சயம் உருபெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
#4.சேட்டேஷ்வர் புஜாரா:
தற்போதைய இந்திய அணியின் டிராவிட்டாக வர்ணிக்கப்படும் ஸ புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். களத்தில் நின்று விட்டால் இவரை வீழ்த்துவது மிகவும் கடினமான காரியமாக மாறிவிடுகிறது. உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரும் கூட இவரின் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. இது வரை 114 இன்னிங்சில் களம் கண்டுள்ள புஜாரா, 5426 ரன்களை குவித்துள்ளா.ர் அவற்றில் 51.19 என்ற பேட்டிங் சராசரியுடன் 18 அரைசதங்களும் 20 சதங்கலும் விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாகவும் இவர் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3.கனே வில்லியம்சன்:
டெஸ்ட் போட்டிகளில் தனக்கே உரிய பாணியில் விளையாடி அமைதியின் சிகரமாக விளங்கி வருகிறார், கனே வில்லியம்சன். பன்னிரண்டாவது உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து அணியை ஒற்றை ஆளாக அழைத்துச் சென்ற வில்லியம்சன், டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்துள்ள சாதனைகள் ஏராளம். இதுவரை 127 இன்னிங்சில் களம் இறங்கியுள்ள இவர்,6139 ரன்களை குவித்துள்ளார். 53.38 என்ற பேட்டிங் சராசரி உடன் 20 சதங்களையும் 30 அரை சதங்களையும் குவித்து மிரள வைத்துள்ளார்.
#2.விராட் கோலி:
அனைத்து 3 தரப்பிலான சர்வதேச போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார், இந்தியாவின் விராத் கோலி. உலகின் அபாயகரமான பந்து வீச்சாளரின் ஓவரிலும் கூட தமது அசாத்திய பாணியை தொடர்ந்து கையாண்டு வருகிறார். நவீன கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமாக கருதப்படும் விராட் கோலி, உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். இதுவரை 131 டெஸ்ட் இன்னிங்சில் களம் கண்டுள்ள இவர், 6613 ரன்களை 53.76 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். அவற்றில் 25 சதங்களும் 20 அரைசதங்களும் அடக்கமாகும். விரைவிலேயே சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#1.ஸ்டீவன் சுமித்:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் என்றால் ஒருவித ஆக்ரோஷத்துடன் களம் காணும் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து சதம் கண்டு தோல்வியின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த தமது அணியை வெற்றி பெறச் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 119 இன்னிங்சில் விளையாடியுள்ளார். அவற்றில் 6485 ரன்களை 62.96 என்ற சராசரியை குவித்துள்ளார். மேலும், 25 சதங்களையும் 24 அரை சதங்களையும் விளாசியுள்ளார். விராட் கோலியை காட்டிலும் 9 புள்ளிகள் கூடுதல் சராசரியை வைத்து உள்ளமையால், இந்தப் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், டான் பிராட் மேனுக்கு அடுத்தபடியாக அதிக சராசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் நீடிக்கிறார், ஸ்டீவன் ஸ்மித். 29 வயதான இவர், சாதிக்க வேண்டிய சாதனைகள் இன்னும் பல உள்ளன. எனவே, இவர் ஆஸ்திரேலியாவின் ஆகச் சிறந்த பேட்டிங் ஜாம்பவானாக பிற்காலத்தில் திகழ்வார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.