கிரிக்கெட் போட்டியில் பெரிதும் அறியப்பட்ட விக்கெட் முறை ரன் அவுட். இது பெரும்பாலும் பேடஸ்மேன் செய்யும் தவறினால் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இதற்கு முக்கிய காரணம் வேகமாக ஓடாதது மற்றும் எதிர்-ஸ்ட்ரைக்கர் உடன் கலந்து யோசிக்காமல் ரன் எடுப்பதே ஆகும். இதனால் பேடஸ்மேன் அல்லது எதிர்-ஸ்ட்ரைக்கர் இருவரில் எவரேனும் ஒருவர் தங்களது விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். இந்திய அணியில் ரோகித் சர்மா – விராத் கோலி இருவரும் களத்தில் பேட் செய்தாலே எவரேனும் ஒருவர் ரன் அவுட் ஆவர் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. இது போன்று சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5 முகமது யூசுப் – 38 முறை
ரன் அவுட் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் வீரர் பாகிஸ்தான் அணியின் முகமது யூசுப். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் தனது ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளில் 38 முறை ரன் அவுட் ஆகியுள்ளார். இவர் இந்த வரிசையில் 5 வது இடம் வகிக்கிறார். இதற்கு காரணம் இவர் மிடில் ஓவர்களில் ரன் எடுப்பதற்காக எதிர் ஸ்ட்ரைக்கர் உடன் ஆலோசிக்காமல் ரன் எடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவது மற்றும் இவர் ரன் எடுக்க ஓடுவதில் தாமதிப்பதே ஆகும். தனது 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 288 போட்டிகளில் விளையாடிஉள்ளார். இவருடைய ரன் அவுட் சதவீதம் 13.92 இது இந்த வரிசையில் உள்ளவர்களில் 2 வது அதிகபட்சம் ஆகும்.
#4 மகிலா ஜெயவர்த்தனே – 39 முறை
இந்த வரிசையில் நான்காம் இடம் வகிப்பவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்த்தனே. இவர் மொத்தம் 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சுமார் 17 வருடம் (1998-2015) இலங்கை அணிக்காக விளையாடினார் ஜெயவர்த்தனே. 39 முறை ரன் அவுட் ஆகியுள்ள இவரின் ரன் அவுட் சதவீதம் 9.33 ஆகும். இவரின் ரன் அவுட்களுடன் காரணம் தேவையில்லாத ரன்களை எடுக்க இவர் முயற்சிப்பதே. இவருடைய ரன் அவுட் சதவீதம் 9.33 என்பதே இந்த வரிசையில் மிகவும் குறைவு.
#3 ராகுல் டிராவிட் – 40 முறை
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் இவர் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். 22 பந்துகளில் அரை சதம் என அனைவரையும் வியக்க வைத்தவர் ராகுல் டிராவிட். அதுமட்டுமல்லாமல் தனது ஓய்விற்கு பிறகும் இந்திய யு-19 அணியிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பையை வாங்கித்தந்தவர் இவர். 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 வருடங்களில் 10,889 ரன்கள் குவித்துள்ளார். இவர் ஆபத்தான ரன்களை எடுப்பதாலே அதிக முறை ரன் அவுட் ஆகியுள்ளார். 40 முறை ரன் அவுட் ஆன இவர் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது ரன் அவுட் சதவீதம் 12.58 ஆகும்.
#2 இன்ஜமாம்-உல்-அக் – 40 முறை
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன இன்ஜமாம்-உல்-அக் இந்த வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார். வித்தியாசமான ஆட்ட முறையினால் அனைவரையும் வியக்க வைப்பவர் இவர். தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இவர் 378 ஒருநாள் போட்டிகளில் 40 முறை ரன் அவுட் ஆகியுள்ளார். ரன்கள் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் இவர் தேவையில்லாத ரன்களை எடுக்க முயற்சிப்பதால் அதிக முறை ரன் அவுட் ஆகியுள்ளார். இவரது ரன் அவுட் சதவீதம் 11.43. இவய் ரன் எடுக்க முற்சித்தாலே எதிரணிக்கு விக்கெட் கிடைப்பது உறுதி.
#1 மார்வன் அட்டபட்டு – 41 முறை
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான மார்வன் அட்டபட்டு 90’ களில் இலங்கை அணியின் முக்கியமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கினார். இந்த வரிசையில் உள்ளவர்களிலேயே துவக்க வீரராக விளங்கும் இவர் 41 முறை ரன் அவுட் ஆகி இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். இவர் வெறும் 268 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இந்த வரிசையில் மிகக்குறைவான போட்டிகளில் விளையாடிய வீரரான இவர் 41 முறை ரன் அவுட் ஆகி உள்ளார். இவரின் ரன் அவுட் சதவீதம் 16% ஆகும். இந்த வரிசையில் இதுவே மிக அதிகமாகும்.