கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்பொழுது இருக்கும் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை. அதற்கு முக்கிய காரணம் பவுலர்களுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளங்கள். இப்பொழுது இருக்கும் பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தும் சாதனைகள் முந்தைய காலங்களில் ஆடிய ஜாம்பவான்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.
இப்படி பேட்டிங் எளிதாகி விட்ட இந்த நாட்களில் எந்த பேட்ஸ்மேன்கள் உண்மையாகவே திறமைசாலிகள் என்று கண்டுப்பிடிப்பது கடினமான ஒரு விஷயம். இதில் இன்னொரு வகையான பேட்ஸ்மேன்களும் உண்டு. அந்த பேட்ஸ்மேன்களின் அதீத திறமையை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டிருப்பார்கள். ஆனால், தொடர்ந்து தன் அணிக்காக ரன்மழை பொழிய தவறியதால் கிரிக்கெட் உலகம் அவர்களை மறந்திருக்கும்.
அவ்வாறு தன் திறமை ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிய ஐந்து பேட்ஸ்மேன்கள்,
#5 உமர் அக்மல் (Umar Akmal)
இப்பொழுது கேட்பதற்கு சிரிப்பாக இருக்கலாம், ஆனால் ஒரு காலத்தில் உமர் அக்மலின் திறமையை கோஹ்லியுடன் ஒப்பிட்டவர்கள் நிறையப் பேர் உண்டு. அவர் தன்னுடைய முதல் டெஸ்டில் சதம் அடித்த பிறகு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. 2009-10 ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானின் அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறிய பொழுது, அக்மல் மட்டும் அபாரமாக ஆடி ரன் குவித்தது அவரின் திறமைக்கு சான்று.
ஆனால் , அவர் வருங்காலத்தில் ஒரு ஜாம்பவானாக உருவெடுப்பார் என்று நம்பிய பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோஹ்லி அளவிற்கு திறமைசாலியாக இருந்தும், அவர் தொடர்ந்து கடினமாக உழைக்காத காரணத்தால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை ஏமாற்றத்தில் முடிந்தது. நல்ல பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் உள்ள ஒரு குணம், தொடர்ந்து பல மணி நேரம் பேட்டிங் செய்யும் திறமை. ஆனால், அக்மலிடம் நன்றாக ஆடி கொண்டிருக்கும் போதே கவனக் குறைவால் தன் விக்கெட்டை வீணடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. கடைசி வரை , அவர் தனது குறைகளை திருத்திக் கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. தேர்வுக் குழு பல வாய்ப்புகள் தந்தும் எதையும் அவர் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
#4 அகமது ஷெஹ்சாத் (Ahmed Shehzad)
இவர் பார்ப்பதற்கு விராத் கோஹ்லி போல் இருந்தது மட்டும் பாகிஸ்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. 2011 உலக கோப்பைக்கு முன் அவர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடித்த சதங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், பாகிஸ்தானின் அப்போதைய தேர்வு குழுவின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை வெகுவே பாதித்தது.
2009இல் அவரது கிரிக்கெட் வாழ்க்கைத் தொடங்கி இருக்கலாம், ஆனால் 2011-இல் ஓபனர் ஆன பிறகே அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. 2011 உலக கோப்பையில் அவர் பெரிதாக ரன்கள் குவிக்காதது நிறைய பேருக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனினும் தேர்வு குழு அவர் மீது நம்பிக்கை வைத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அவரைத் தேர்வு செய்தது. அவரும் அத்தொடரில் சதம் விளாசி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் அணியிலிருந்து நீக்கபட்டார். அவர் மீண்டும் அணியில் இடம் பிடிக்க இரு ஆண்டுகள் தேவைப் பட்டது. 2013-இல் அணியில் இடம் பிடித்த பிறகு அவரால் பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை. அபுதாபியில் 176 ரன்களில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஆண்டர்சன் வீசிய பந்து அவரை தாக்கி எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பாபர் அசாம், இமாம்-உல்-ஷக் போன்ற திறமையான வீரர்கள் இருப்பதால் மீண்டும் அவர் அணியில் இடம் பிடிப்பது கடினம்.
#3 ரவி போபாரா (Ravi Bopara)
ரவி போபராவின் கிரிக்கெட் வாழ்க்கை பெரும் வெற்றிகளும், ஏமாற்றங்களும் நிறைந்த ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி பல முறை தன் அணியை மீட்டெடுத்தார். பின், 2009-இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ஹாட்ரிக் சதங்கள் விளாசி டெஸ்ட் அணியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
ஆனால், ஆஷஸ் தொடரில் அவரை 3ஆம் இடத்தில் களமிறக்க இங்கிலாந்து அணி முடிவு செய்தது. எனினும் , ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் இடத்தைப் பிடித்த டிராட் அபாரமாக ஆடியதால் போபரா அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2013 சாம்பியன்ஸ் டிராபி அணியில் மீண்டும் இடம் பிடித்த போபரா , பேட்டிங் ஆல் ரவுண்டராக ஜொலித்தார். பின் இரு ஆண்டுகள் இங்கிலாந்து அணியில் சாதகமான ஆடுகளங்களில் அவரின் மிதமான வேகப்பந்து வீச்சுக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2015 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி வெளியேறிய பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். இன்றைய பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியில் அவர் மீண்டும் இடம் பிடிப்பது கடினம்.
#2 குசல் பெரரா (Kusal Perera)
குசல் பெரராவின் பேட்டிங் ஸ்டைலை பார்த்தவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது ஜெயசூரியா தான். பெரரா சிறு வயதில் வலது கை பேட்ஸ்மேனாக தான் திகழ்ந்தார். தன்னுடைய ஹீரோ ஜெயசூரியாவைப் போல் ஆட விரும்பியதால் இடது கை ஆட்டகாரராக மாறினார்.
ஜெயசூரியாவைப் போலவே தொடக்கத்தில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பதில் வல்லவர். ஆனால் , அவர் நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக் கொண்டு தன் அணி ஜெயிக்கும் வகையிலான ஒரு இன்னிங்சை தொடர்ந்து ஆடாத காரணத்தால் தேர்வுக் குழு அவரை நீக்கியது. கிரீசில் நன்றாக செட் ஆகிவிட்ட பிறகும் தேவையில்லாத ஷாட் ஆடி அவரின் விக்கெட்டைப் பறிக்கொடுத்துவிடுவார்.
தற்போதைய இலங்கை அணி மிகவும் பலவீனமாக உள்ளதால், குசல் பெரரா கடினமாக உழைத்தால் மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்பு அதிகம்.
#1 ஹாமிஷ் ரூதர்ஃபோர்ட் (Hamish Rutherford)
மார்டின் குரோவால் திறமைவாய்ந்த பேட்ஸ்மேன் என அங்கீகரிக்கபட்ட ரூதர்ஃபோர்ட், தனது முதல் டெஸ்டிலேயே இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்தார். அவரின் பேட்டிங் ஸ்டைல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால், முதல் டெஸ்டிற்கு பிறகு அவர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் நியூசிலாந்து தேர்வுக் குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்தது. ஆனால் , அவர் மீது தேர்வுக் குழு வைத்திருந்த நம்பிக்கை வீணாகப் போனது.
அவர் சர்வதேச அரங்கில் சொதப்ப முக்கிய காரணம் அவரின் பேட்டிங்கில் உள்ள டெக்னிகல் குறைகள். குறிப்பாக ஸ்விங் பவுலர்சுக்கு எதிராக அவர் மிகவும் திணறினார்.
ஒரு நல்ல தொடக்கத்தை அவர் பயன் படுத்திக்கொள்ள தவறியது நியூசிலாந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.