கிரிக்கெட் என்று வந்து விட்டால் களத்தில் நடைபெறும் ஆட்டங்களைத் தவிர்த்தும் ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு. கிரிக்கெட் கமெண்ட்ரி மற்றும் கமெண்டேட்டர்களின் மீதான காதல் அதில் ஒரு வகை. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பல விதம்! பல வகை! ஒவ்வொருவரும் தங்களின் பிரத்யேக உச்சரிப்பால் ஆயிரமாயிரம் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார்கள்தான். எனினும் நாம் இங்கே அவர்களில் சிறந்த ஐந்து பேரைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.
#1. டோனி க்ரேய்க்
80களின் இறுதியிலிருந்து 90 களின் முழுமைக்கும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பின்போது ஒரு கனத்த சாரீரம் உலகளவில் தனக்கென ஒரு பட்டாளத்தையே ரசிகர்களாக உருவாக்கிக் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்றால் அது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி க்ரெய்க்கினுடையது. தனது கட்டைக்குரலில் தந்த தொலைக்காட்சி வர்ணனையின் மூலம் கிரிக்கெட்டை ஒரு பரபரப்பான மசாலாப்படம் பார்க்கும் விதமான பரவச உணர்வை டோனி பார்வையாளர்களுக்குள் விதைத்தார். ஆட்டக்காரர்கள் சாதாரணமாக ஓடிக் கடக்கும் இரண்டு ரன்களைக் கூடத் தனது திறமையான வர்ணனையின் மூலம் நெருப்புப் பொறி பறக்க வைத்திருப்பார். பாகிஸ்தான் - இந்தியா மேட்சின் போதோ, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடர்களின் போதோ ஆட்டக்களத்தை ஒரு போர்க்களமாக ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியதற்கு டோனியின் வர்ணனையும் ஒரு முக்கிய காரணம். சச்சின் ஆஸ்திரேலியாவைப் போட்டுத் தாக்கிய ஷார்ஜா மேட்சை முடிந்தால் ஒரு தடவை போட்டுப் பாருங்கள். டோனி க்ரேய்க்கின் மகத்துவம் புரியும்.
#2. ஜெப்ரி பாய்காட்
மற்றுமொரு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் சிறப்பானதொரு வர்ணனையாளர். சாதாரண பார்வையாளர்கள் அறிந்திருக்க முடியாத, பழைய மேட்ச்களில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான சம்பவங்களை வர்ணனையின்போது இடையிடையில் சொல்வது இன்றைய கிரிக்கெட் கமெண்ட்ரியில் மிகவும் ரசிக்கப்படுகிறது. அதில் பாய்காட் முன்னோடி. தனது வர்ணனையின்போது பாய்காட் பகிரும் கதைகளைக் கேட்பதே பெருத்த சுகம் தரும் அனுபவம்! இவருக்கு ஒரு வீரரைப் பிடித்து விட்டதெனில் ஒரு சிறப்பு பட்டப்பெயரை தந்து மகிழ்வார். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை மிக விரும்பிய பாய்காட் அவருக்குச் சூட்டிய “ப்ரின்ஸ் ஆப் கல்கட்டா” தான் இன்றளவிலும் தாதாவிற்குக் கிடைத்த சிறந்த பாராட்டு. அந்த “ப்ரின்ஸ் ஆப் கல்கட்டா” வை பாய்காட் தனது ஸ்பெஷலான உச்சரிப்பில் சொல்லக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்!
#3. ஹர்ஷா போக்ளே
தன்னுடைய வர்ணனை கரியரை ரேடியோ காலத்திலேயே துவங்கிய நீண்ட அனுபவம் உடையவர் ஹர்ஷா போக்ளே. இயல்பான எளிமையான இந்திய ஆங்கிலம் ஹர்ஷாவின் தனிச்சிறப்பு. மேட்சுகளுக்கு இடையில் நட்புடன் கிரிக்கெட் வீரர்களை இவர் எடுக்கும் சிறு நேர்காணல்கள் அவ்வளவு தகவல் பொதிந்தவைகளாக இருக்கும். ரேடியோ கால வர்ணனையாளர் என்பதால் அந்த வேலைக்கான ஒரு ஒழுங்கை ஒட்டி நாகரீகமாக மட்டுமே பேசுவார். சிண்டு முடியும் வேலைகளைப் பெரும்பாலும் இவருடைய வர்ணனையில் கேட்க இயலாது. புன்னகை மன்னன்!
#4. நவ்ஜோத் சிங் சித்து
இந்தியாவின் டோனி க்ரேய்க்’ என இவரைக் குறிப்பிடலாம். கிரிக்கெட்டைத் தனது படாடோபமான வர்ணனையின் மூலம் மசாலாப்படமாகவே உணர வைக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். இந்தி என்றாலும் சரி,ஆங்கிலம் என்றாலும் சரி வெளுத்துக்கட்டும் வர்ணனை இவருடையது! இடையிடையே “Fortune favours brave.” you got to a believer first..thn you can be a achiever..” என்பன போன்ற பொன்மொழிகளை மிகச்சரளமாக தன்னுடைய வர்ணனைகளினூடே பயன்படுத்துவது சித்துவின் ஸ்பெஷாலிட்டி.
#5. சுனில் கவாஸ்கர்
முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் தன்னுடைய மட்டைவீச்சில் காட்டிய அதே துல்லியத்தையும் மிளிர்வையும் தன்னுடைய வர்ணனையிலும் காட்டும் மகத்தான கமெண்டேட்டர். ஒவ்வொரு போட்டியின் வர்ணனையின் இடையிலும் தன்னுடைய அனுபவப்பகிர்வை அவ்வளவு அழகாகவும், இயல்பாகவும்,வெளிப்படுத்தும் சிறப்பான தொகுப்பாளராக இன்றளவிலும் செயல்பட்டு வருகிறார். “Now he has the license to free his hands..” என்பன போன்ற வாக்கியங்கள் வந்து விழும் அதே வேளையில் இவருடைய வர்ணனையில் கிரிக்கெட் விதிமுறைகளைப் பற்றிய தெளிவான பகிர்தல்களும் அதிகம் கிடைத்திடும்.
இன்னமும் கூட சவுரவ் கங்குலி, சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர், மைக்கேல் ஹோல்டிங், ஆலன் வில்கின்ஸ், ரமீஸ் ராஜா மற்றும் வாசிம் அக்ரம் போன்ற சிறந்த வர்ணனையாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் சிறந்த ஐவரைப் பற்றி மட்டுமே இங்கு பார்த்தோம்.