ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பல சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பார்த்துள்ளோம். பொதுவாக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாததால் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாத அத்தகைய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது கடினமாகும். அவ்வாறு, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களும் உள்ளனர். அத்தகைய 5 வீரர்களை குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#1.ஜிம் லேக்கர் (ஆஷஸ் 1956):
ஜிம் லேகர் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 193 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1956இல் நடந்த ஆஷஸ் தொடரில் சுழற்பந்து வீச்சாளரான ஜிம் லேக,ர் சிறந்த பார்மில் இருந்தார். ஏற்கனவே, முதல் மூன்று போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அபாரமாக பந்துவீசினார். அந்தப் போட்டியில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், இங்கிலாந்து அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த போட்டி "லேக்கர்ஸ் கேம்" என அழைக்கப்பட்டது. 63 ஆண்டுகளாக இந்த சாதனை நீடிக்கிறது. 1999-இல் அனில் கும்ப்ளே மட்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#2.ஸ்டூவர்ட் மெக்கில் (ஆஷஸ் 1999):
ஸ்டூவர்ட் மெக்கில், 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவர் தன்னை நிரூபித்துள்ளார்.1999ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 முன்னிலையில் இருந்தது. இருப்பினும், நான்காவது போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் (ஷேன் வார்னே, கொலின் மில்லர் மற்றும் ஸ்டூவர்ட் மெக்கில்) ஐந்தாவது போட்டியை சந்திக்க முடிவு செய்தது.
ஸ்டூவர்ட் மெக்கில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் முன்னிலை பெற்றது. இருப்பினும், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசியது . இங்கிலாந்து அணி வெற்றி பெற 287 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டூவர்ட் மெக்கில் இரண்டாவது இன்னிங்சிலும் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
#3 ஷேன் வார்னே (ஆஷஸ் 2005):
சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்கிய ஷேன் வார்னே, 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் சிறந்த பார்மில் இருந்தார். அந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சில் அசத்தினார், ஷேன் வார்னே. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவரின் அபாரமான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற 282 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.
இருப்பினும், ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் என்ற வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில்தான் ஷேன் வார்னே " மேஜிக் பால் " என்று அழைக்கக்படும் அபாரமான பந்தை ஆண்ட்ரூ ஸ்ட்ராஸிற்கு வீசினார், பந்து ஆப்சைடில் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்பில் பட்டது. இவ்வாறு, சுழற்பந்து வீச்சில் பல அதிசயங்களை காண்பித்தார், ஷேன் வார்னே.
#4 நேதன் லயன் (ஆஷஸ் 2019):
சில நாட்களுக்கு முன், 355 விக்கெட்டுகளை வீழ்த்திய டெனிஸ் லில்லி சாதனையை சமன் செய்தார். நேதன் லயன் , எப்படிப்பட்ட நாடுகளாக இருந்தாலும் நேர்த்தியாக பந்து வீச கூடியவராக வலம் வருகிறார், லயன் .
2019உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி நம்பிக்கையுடன் ஆஷஸ் தொடரில் பங்கேற்றது. ஆனால், இந்த ஆண்டு ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், லயன். இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#5 . கிரேம் ஸ்வான் (ஆஷஸ் 2019):
மிகவும் சாதாரணமாக வழக்கமான சுழற்பந்து வீச்சை வீசக்கூடியவர் கூடியவர், கிரேம் ஸ்வான். அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன் வரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமமான நிலையில் இருந்தனர். முதல் இன்னிங்சில் , ஸ்வான் 4 விக்கெட்டுகளையும் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இரண்டாவது இன்னிங்சில் , ஸ்வான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.
இரண்டாவது இன்னிங்சில் கிரேம் ஸ்வான் பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் வேகமாக 63 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க காரணமாக அமைந்தார்.