டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்!!!

5 bowlers with most Test wickets against India
5 bowlers with most Test wickets against India

இந்திய அணியானது டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதன் மூலம் தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதுபோக இந்திய அணியானது இதுவரை பல நட்சத்திர பேட்ஸ்மேன்களை உலக கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கவாஸ்கர், சச்சின்-ல் துவங்கி தற்போது விராட் கோலி வரை தரமான பேட்ஸ்மேன்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட திறமையான பேட்ஸ்மேன்களையே பல பந்துவீச்சாளர்கள் தங்களது பௌலிங்கால் பலமுறை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அப்படி இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்களை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

#5) மால்கம் மார்ஷல்

Malcolm Marshall
Malcolm Marshall

மேற்கிந்திய தீவுகள் அணியானது அப்போதைய காலகட்டங்களில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது. முதல் உலககோப்பையை கைப்பற்றியதன் மூலமே இதனை நாம் அனைவரும் அறியலாம். அதுமட்டுமல்லாமல் பல உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து எதிரணிகளை கலங்கடித்து வந்தது இந்த அணி. ஹோல்டிங் முதல் மால்கம் மார்ஷல் வரை நுணுக்கமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தது. மார்ஷல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 376 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கெதிரான 17 போட்டிகளில் 76 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் ஐந்தாம் இடம் வகிக்கிறார்.

#4) நாதன் லயன்

Nathon Lyon
Nathon Lyon

தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இந்த பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறார். பெரும்பாலும் சுழற் பந்துவீச்சார்களை பொறுத்தவரையில் தங்களது நாட்டில் மட்டுமே விக்கெட்டுகளை அதிகமாக வீழ்த்துவர், எதிரணி மண்ணில் அவர்களது பந்து அந்த அளவுக்கு எடுபடாது. ஒருசில பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே எதிரணி மண்ணிலும் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்துவது சாத்தியம். அப்படிப்பட்ட வீரர் தான் நாதன் லயன். சமீபத்தில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு இவரின் அபார பந்துவீச்சு முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவர். இதுவரை இவர் டெஸ்ட் போட்டிகளில் 346 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் இந்திய அணிக்கெதிரான 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

#3) இம்ரான் கான்

Imran Khan (right)
Imran Khan (right)

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பந்துவீச்சாளரின் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் கான். இவர் பந்துவீச்சாளர் மட்டுமல்ல சிறந்த ஆல்ரவுண்டரும் கூட தனது சிறப்பான ஆல்ரவுண்டர் திறமையின் மூலம் பல போட்டிகளை பாகிஸ்தான் அணிக்காக வெற்றியை தேடித்தந்துள்ளார். இவர் கேப்டனாக பதவிவகித்த காலங்களில் பாகிஸ்தான் அணி பல சாதனைகளை படைத்தது.

அப்போதைய காலங்களில் 88 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார்.

இவர் மொத்தம் 363 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இவர் பாகிஸ்தான் வீரர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இவரை முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவர்களின் பரம எதிரியான இந்திய அணிக்கெதிரான போட்டி என்று வந்து விட்டால் இவரை கையில் பிடிக்க முடியாது. அவ்வளவு வெறித்தனமாக விளையாடுவார். இதன் விளைவே இவரை இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில வைத்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் 94 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.

#2) முத்தையா முரளிதரன்

First Test South Africa v Sri Lanka - Day One
First Test South Africa v Sri Lanka - Day One

பந்துவீச்சில் படைக்கப்பட்ட சாதனைகள் என நாம் எடுத்து பார்க்கும் போது இந்த ஒரே பெயர் பல சாதனைகளில் இடம் பெற்றிருக்கும் அந்த பெயர் தான் முத்தையா முரளிதரன். தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என கேட்டால் அனைவரும் சொல்லும் ஒரே பெயர் இவரின் பெயர் தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் தனது அசாத்திய மாயாஜால சுழற் பந்தின் மூலம் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே வேறு எந்த பந்துவீச்சாளரும் தொடாத புதிய உச்சத்தை இவர் தொட்டுள்ளார். ஆம் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர் இவர் தான். அணைத்து அணிகளுக்கெதிராகவும் தனது பந்தின் மூலம் பல விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். அதில் இந்திய அணிக்கெதிரான 22 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 7 முறை 5 விக்கெட்டுகளையும், இருமுறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியையே கலங்கடித்த ஒரே சுழற் பந்து வீச்சாளர் இவர் தான்.

#1) ஜேம்ஸ் ஆண்டர்சன்

India v England - 3rd Test: Day Four
India v England - 3rd Test: Day Four

ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த பட்டியலில் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கெதிராக 27 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவர். இந்திய அணிக்கெதிரான 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரரும் இவரே.

Quick Links

App download animated image Get the free App now