கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் இருக்கும் ஒரே உயர்ந்த ஆசை உலக கோப்பையை தான் ஓய்வு பெறுவதற்கும் தனது நாட்டிற்காக விளையாடி வென்று தரவேண்டும் என்பதே. ஆனால் உலக கோப்பை தொடரானது 4 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது. அதிலும் ஏதேனும் ஒரு அணி மட்டுமே அந்த கோப்பையை வெல்வதால் மற்ற அணி வீரர்களுக்கு அது கனவாகவே மாறி விடுகிறது. சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட 5 உலககோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். ஆனால் அவரது உலகக்கோப்பை கனவானது அவரின் கடைசி உலககோப்பையான 2011 உலக கோப்பை தொடரிலேயே நிறைவேறியது. ஒருவேளை அந்த ஆண்டும் இந்திய அணியால் உலக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போயிருந்தால் சச்சின் டெண்டுல்கருக்கு உலககோப்பையானது வெறும் கனவாகவே அவரின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடைந்திருக்கும். அந்தவகையில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் தங்களது கேரியரில் உலக கோப்பையை வென்றதே கிடையாது அந்த வரிசையில் உள்ள டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) ஏபி டீவில்லியர்ஸ்
கிரிக்கெட் உலகின் சூப்பர்மேன், மிஸ்டர் 360 என ரசிகர்களால் பல பெயர்களால் அழைக்கப்படுபவர் ஏபி டீவில்லியர்ஸ். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேக சதம், 150 ரன்கள் என இவர் பல சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார் இவர். தென்னாப்ரிக்க அணிக்காக விளையாடிய இவர் 228 ஒருநாள் போட்டிகளில் 9558 ரன்களை குவித்துள்ளார். இவரின் அவ்ரேஜ் 53.5 ஆகும்.
2015ல் உலககோப்பையை நெருங்கி வந்த இவரால் அரையிறுதி போட்டியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அப்போது இவரின் கண்ணீரை பார்த்த எந்த ஒரு கிரிக்கெட் ரசிகருக்கும் அது மனதை உருக்கும் காட்சியாகவே அமைந்திருக்கும். இவர் ராசி இல்லாத வீரர் இவர் இருக்கும் வரை அந்த அணி கோப்பையை வெல்லாது என பலதரப்பிலிருந்தும் எதிர்மறையான கருத்துக்கள் கிளம்பின. இந்நிலையில் இவர் இந்த வருட உலககோப்பை போட்டிகளில் விளையாட போவதில்லை என கூறி ஓய்வினை அறிவித்தார். இவரின் இழப்பு அந்த அணியை பெரிதும் பாதித்தது. இதன் விளைவாக 2019 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அணியாக தென்னாப்ரிக்க அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்தது.
#4) பிரைன் லாரா
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலை சிறந்த வீரராக கருதப்படுபவர் லாரா. டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்ல் இவர் அடித்த 400 ரன்கள் என்ற சாதனையை இன்றளவும் எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியாததாகவே உள்ளது. மேலும் முதல் தர போட்டிகளில் ஒரே இன்னிக்ஸ்ல் 500 ரன்கள் அடித்த வீரரும் இவரே. அதுமட்டுமல்லாமல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனைக்கு இவரே சொந்தக்காரராகிறார். கடைசியாக இவர் விளையாடிய 2007 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியானது லீக் சுற்றியே வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கடைசிவரை இவரின் உலககோப்பை கனவு வெறும் கனவாகவே போனது.