அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் தனது நாட்டிற்காக அணியில் விளையாட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அவ்வாறு அறிமுகமாகும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். ஆனால் சிலர் துர்தஷ்டவசமாக ஆட்டத்தில் காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே காயமான 5 வீரர்களைப் பற்றி இங்கு காணலாம்.
#5) கிரேஜ் ஓவர்டன்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிரேஜ் ஓவர்டன் 2017-18 ஆஷஸ் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர் தனது முதல் விக்கெட்டாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்-யை வீழ்த்தி அசத்தினார். இவ்வாறு சிறப்பாக பந்து வீசிய அவரால் பேட்டிங்-ல் ஜொலிக்க முடியவில்லை. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மிங்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் காயமான அவர் ஆட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார். காயம் விரைவில் குணமானதால் அவர் அந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடாமல் போனார்.
#4) போய்டு ரான்கின்
அயர்லாந்து அணிக்காக ஆரம்ப காலங்களில் விளையாடிய ரான்கின் தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே காயமானார். 2014 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகம் செய்யப்பட்ட இவர் போட்டியின் முதல்நாள் ஆட்டத்திலேயே இருமுறை காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்ல் அவர் காயம் காரணமாக வெறும் 8.2 ஓவர் மட்டுமே பந்து வீசினார். பின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் பந்து வீசிய அவரால் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் அவரின் முதல் போட்டியே கடைசி போட்டியாகவும் மாறியது. பின்னர் அவர் அயர்லாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடத் துவங்கினார். இரு அணிகளுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர் ஆனர்.
#3) சர்துல் தாகூர்
சமீபத்தில் அறிமுகமான போட்டியில் காயமான வீரர் சர்துல் தாகூர். பல முதல் தர போட்டிகள் விளையாடிய தாகூர்-க்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் முகமது சமி-க்கு ஓய்வு கொடுத்து அவருக்கு பதில் சர்துல் தாகூர் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த போட்டியில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய அவர் காயமானார். அதனால் களத்தை விட்டு வெளியேறிய அவர் அந்த போட்டி முழுவதும் விளையாடவில்லை. பின்பு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
#2) இமாம்-உல்-அக்
பாகிஸ்தான் அணியில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வருபவர் இமாம்-உல்-அக். இவர் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் அவர் களமிறங்கிய முதல் பந்திலேயே அடிபட்டு களத்தை விட்டு வெளியேறினார். நான்-ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்த அவர் அசார் அலி அழைத்த ரன் எடுக்கும் போது அயர்லாந்து அணி வீரர்கள் எறிந்த பந்தினால் காயமாகி களத்தை விட்டு வெளியேறினார். பின் இரண்டாம் இன்னிங்ஸ்ல் களமிறங்கிய அவர் 74 ரன்கள் அடித்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
#1) ஷிகர் தவான்
இந்திய அணியின் அதிரடி ஓப்பனரான ஷிகர் தவான் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த போட்டியில் 187 ரன்கள் குவித்த அவர் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அந்த போட்டியில் பீல்டிங்ன் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அவர் களத்தை விட்டு வெளியேறினார். அதனால் அந்த தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியவில்லை.