டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை இந்தியா சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுலகர் முதல் தற்போது விராத்கோலி வரை தலைசிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளது. டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பேட்ஸ்மேன் ரன் குவிப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அணியின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிலைத்து ஆடி அணியின் வெற்றிக்கு உதவிட வேண்டும். அந்த வகையில் இந்தியாவின் தலைசிறந்த 5 டெஸ்ட் வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) விராத்கோலி
இதே இந்த வரிசையை நாம் மூன்றாண்டுகளுக்கு முன்பு கணக்கிட்டால் அதில் விராத்கோலி-க்கு இடமிருந்திருக்காது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அவர் டெஸ்ட் போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்து விட்டார் என்றே கூறலாம். 2016 முதல் டெஸ்ட் போட்டிகளில் 3,367 ரன்களை குவித்துள்ளார் இவர். அதில் 13 சதங்களும் அடங்கும். அதில் 6 சதங்களை இரட்டை சதமாக மாற்றியுள்ளார் இவர். இவரது கடந்த மூன்றாண்டு டெஸ்ட் சராசரி 70.21. டெஸ்ட் வரலாற்றிலேயே தொடர்ந்து 4 டெஸ்ட் தொடரில் 4 இரட்டை சதங்கள் விளாசிய வீரரும் இவரே. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுள் 7 வது இடத்தில் உள்ளார் இவர். இன்னும் 7-8 ஆண்டுகள் விளையாடினால் வரலாற்றில் பல சாதனைகளை திருத்தி எழுத வேண்டியிருக்கும்.
#4) விவிஎஸ் லக்ஷ்மன்
விவிஎஸ் லக்ஷ்மனின் 281* ரன்கள் vs ஆஸ்திரேலியா இன்றளவும் டெஸ்ட் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. இவர் இந்தியாவின் 2000 ஆம் ஆண்டுகளில் சிறந்த நான்கு ஆட்டக்காரர்களுள் ஒருவராகவும் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 8,781 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார் இவர். இவரின் சராசரி 45.97. இதுமட்டுமின்றி அப்பேதைய காலகட்டத்தில் சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 6 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2,434 ரன்கள் குவித்துள்ளார் இவர்.
#3) சுனில் கவாஸ்கர்
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தலைசிறந்த துவக்க வீரராக விளங்கியவர் சுனில் கவாஸ்கர். அதுமட்டுமின்றி உலக அரங்கிலே டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரரும் இவர் தான். 1970 மற்றும் 80களில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். இவர் ஓய்வினை அறிவிக்கும் போது சர்வதேச அரங்கில் அதிக சதம் விளாசிய வீரரும் இவரே ( 34 சதங்கள் ). இரு வெவ்வேறு மைதானங்களில் தொடர்ந்து நான்கு சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் கவாஸ்கர் தான்.
#2) ராகுல் டிராவிட்
டெஸ்ட் போட்டி என்றாலே நம் அனைவரது மனதிலும் ஆழமாக பதிந்தவர் டிராவிட் தான். இந்தியாவின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் இவர் டெஸ்ட் போட்டிகளில் உலக அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 இரட்டை சதங்கள், 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றிலேயே அதிக பந்துகளை சந்தித்த ஒரே வீரர் இவர் தான் (31,288). மற்ற எந்த வீரரும் 30,000 பந்துகளை கூட சந்திக்காதது குறிப்பிடத்தக்கது.
#1) சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுலகர் இந்தியாவிற்ன பெரும்பாலான சாதனைகளுக்கு செந்தக்காரராக உள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அதிக ரன்கள் ( 15,921 ) மற்றும் அதிக சதங்கள் ( 51) குவித்த வீரர் இவரே. தன் நாட்டிற்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர். இந்தியாவின் உயரிய விருதான ' பாரத ரத்னா ' விருதினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.