தற்போதைய காலங்களில் கிரிக்கெட் போட்டியானது உலக அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதிலும் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் அதிக ரசிகர்களால் இந்த போட்டியானது மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த இந்த கிரிக்கெட் போட்டியில் தற்போது பெண்களும் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பெண்களில் கிரிக்கெட் போட்டியும் அதிக ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தான் முதல் முறையாக பெண்களுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டது. இது தற்போது 50க்கும் அதிகமான நாடுகள் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றன. அதில் 10 அணிகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்தும் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொகுப்பில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 5 வீராங்கனைகளை பற்றி காணலாம்.
#5) சனா மிர்
பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான சனா மிர் தற்போது ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிறார். 33 வயதான இவர் இன்றளவும் பாக்கிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை பாக்கிஸ்தான் அணிக்காக கேப்டனாக 36 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 17 போட்டிகளை அந்த அணி வெற்றி கண்டுள்ளது. இவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாக்கிஸ்தான் நாட்டுக்காக இவர் ஏசியன் கேம்ஸ்-ல் இரண்டு தங்க பதக்கங்களையும் வென்றுள்ளார். பாக்கிஸ்தான் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீராங்கனை இவரே .
#4) சாரா டெய்லர்
இவரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெரும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் இவர் ரசிகர்களால் தோனியின் லேடி வெர்சன் எனவும் அழைக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் தனது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்காக பல ரன்களையும் குவித்துள்ளார். இவரே முதல் முறையாக ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இணைந்து விளையாடிய ஒரே பெண் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஐசிசி வெளியிட்ட டி 20 போட்டிகளில் சிறந்த பெண் வீராங்கனை விருதினை மூன்றுமுறை (2012, 2013, 2018) பெற்றுள்ளார். இன்றளவும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இவர் திகழ்ந்து வருகிறார்.
#3) மிதாலி ராஜ்
கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடிவருகிறார் மிதாலி. அதுமட்டுமல்லாமல் மகளீர் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீராங்கனை என்று அனைவராலும் அழைக்கப்படுபவரும் இவரே. வயதிற்கும் திறமைக்கும் சம்மதமில்லை என நிருபித்தவர் மிதாலி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இவரின் அசாத்திய பேட்டிங் திறமையை பார்த்த ரசிகர்கள் இவரை மகளீர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் எனவும் அழைத்து வருகின்றனர். 36 வயதான இவர் இன்றளவும் பல போட்டோஷூட்களை நடத்தி தான் இன்னமும் அதே அழகுடன் இருப்பதாக பலமுறை நிருபித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் இவரே.
#2) எலைஸ் பெர்ரி
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த எலைஸ் பெர்ரி தன் நாட்டுக்காக கிரிக்கெட் மற்றும் கால்பந்து என இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு தனது 16 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அதே ஆண்டில் கால்பந்து போட்டிகளிலும் அறிமுகமானார். இவர் இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டு இவர் இரண்டில் ஏதேனும் ஒரு போட்டியினை மட்டும் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது இவர் தேர்ந்தெடுத்தது கிரிக்கெட் தான். 28 வயதான இவர் இன்றளவும் தன் நாட்டிற்க்காக இரண்டு போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆனால் கால்பந்து போட்டிகளை காட்டிலும் கிரிக்கெட் போட்டிகளிலேயே இவர் அதிகமாக விளையாடியுள்ளார். இவரை போல சிறந்த ஆல்ரவுண்டர் இன்றளவும் மகளீர் கிரிக்கெட் போட்டிகளில் எவரும் பார்த்ததில்லை.சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் கூட சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இவர். சர்வதேச டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவர் 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.
#1) ஸ்ம்ரிதி மந்தனா
தற்போதைய இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரே பெண் வீராங்கனை இவர் தான். 22 வயதேயான இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே அமைத்துள்ளார். இந்திய அளவில் இருக்கட்டும் தமிழக அளவில் பெரும்பான்மையான ரசிகர்கள் மகளீர் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு காரணமே இவர் தான். அந்த அளவுக்கு இளைஞர்களின் மனதில் நீக்க முடியாத இடத்தினை பிடித்துள்ளார் இவர். இதுவரை இவர் இந்திய அணிக்காக 44 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி 20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.