2018 ஆம் ஆண்டில் பல அறிமுக வீரர்கள் களமிறங்கி தங்கள் திறனை சரியான பாதையில் வெளிப்படுத்தினர். ஒரு நாள் போட்டி, T20 போட்டி , டெஸ்ட் போட்டி என அனைத்து தரப்பு போட்டியிலும் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பை பெற்றனர். இளம் வீரர்கள் தங்கள் வயது உடையவர்களுடன் விளையாடிவிட்டு பின்பு சீனியர் வீரர்களுடன் களத்தில் இறங்க சற்று வித்தியாசமாகவே இருக்கும். அதையும் தாண்டி சில வீரர்கள் சாதித்து வருகின்றனர். அப்படி பார்க்கையில் T20 லீக் போட்டிகள் தான் இளம் வீரர்களுக்கு உதவியாய் உள்ளது. உலகின் பல்வேறு ஜாம்பவான்களுடன் ஒன்றாக கலந்து விளையாடுகையில் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள மேலும் உறுதுணையாய் இருக்கும்.
2019 ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில் இவ்வருடம் ஜூனியர் அணியில் இருந்து சீனியர் அணிக்காக விளையாட வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு வீரர்களை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.
#5 ஜேசன் சங்கா
19 வயதான ஜேசன் ஆஸ்திரேலியா அணியின் எதிர்கால நட்சத்திரம் என்று அந்நாட்டின் பல பத்திரிகைகள் எழுதி வருகின்றனர். வலது கை பேட்ஸ்மேனான இவர், நல்ல லெக் பிரேக் பௌலரும் கூட. ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் போட்டிக்கான சர்வதேச அணியில் இவ்வருடம் இடம் பிடித்தால் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 19 வயதுக்குற்பட்ட ஆஸ்திரேலியா அணியை உலகக்கோப்பையில் வழிநடத்தி இறுதிப் போட்டிவரை அழைத்து சென்றார். நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அறிமுகமாகிய சங்கா, இளம் வயதில் அந்த அணிக்கு விளையாடிய வீரர் என்ற 90 வருட சாதனையை முறியடித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் T20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் சங்கா, இளம் வயதில் பிக் பேஷ் லீகில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் படைத்தார்.
#4 ஜாஹிர் கான்
ரஷீத் கான், நபி, முஜிபுர் ரஹ்மான் என்று சூழல் பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமே இல்லாத அணி ஆப்கானிஸ்தான். இவர்களின் வரிசையில் அடுத்து வளர்ந்து வருபவர் ஜாஹிர் கான். இடது கை பந்துவீச்சாளரான இவர், சைனாமென்(Chinaman) எனப்படும் ரிஸ்ட் ஸ்பின் வீசக்கூடியவர். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சாதித்துவரும் இவர், கூடிய விரைவில் ஆப்கான் ஒருநாள் மற்றும் T20 அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை நெருங்கிவிட்டார்.
இந்திய அணிக்கு எதிராக சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க தவறினார். ஏற்கனவே வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கும் ஆப்கான் அணிக்கு இவரின் வருகை பக்க பலமாக இருக்கக்கூடும்.
#3 லாய்ட் போப்
தற்போதைய கிரிக்கெட் சூழ்நிலையில் லெக் ஸ்பின் பந்துவீச்சு மிகவும் பிரபலமாகி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் லெக் ஸ்பின் வீரர்களை அணியில் இணைத்து கொண்டு வருகின்றனர். ஆசிய கண்டங்களில் தான் இம்மாதிரியாக பந்து வீசும் வீரர்களை அதிகமாக காணமுடியும். ஆஸ்திரேலிய அணியில் ஷான் வார்னேக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி அப்படி எந்த வீரரும் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் 19 வயதுக்குற்பட்ட உலகக்கோப்பைக்கு பிறகு அதிகமாக பேசப்பட்ட ஒரு நபர் லாய்ட் போப்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இவர் U19 உலகக்கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெறும் 35 ரன்கள் மட்டுமே வழங்கி 8 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே இவரின் சிறப்பான பந்து வீச்சும் கூட. அடுத்த ஷான் வார்னே என புகழப்படும் போப், தற்போது போதிய திறமை இல்லாமல் தவித்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த வீரராக வரக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்.
#2 ஜோ கிளார்க்
இங்கிலாந்து அணியின் அடுத்த இளம் வீரர் ஜோ கிளார்க். கவுண்டி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி உள்ள இவர், இங்கிலாந்து அணியின் சர்வதேச வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 19 வயதில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக முதல் தர போட்டியில் 2015 ஆம் ஆண்டு வாய்ப்பை பெற்றார். இதுவரை கவுண்டி அணிக்காக 12 சதங்களை விளாசியுள்ளார். ஹஸீப் ஹமீது மற்றும் பென் டுக்கேட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் வாய்ப்பை அதிகம் எதிர் நோக்கியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் கிளார்க் இங்கிலாந்து அணியின் உத்தேச அணியில் எப்போதும் இடம் பிடித்து வருகிறார்.
22 வயதான கிளார்க் அடுத்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதி வருகின்றனர்.
#1 ஜோப்ஃரா ஆர்ச்சர்
2018 ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் ஜோப்ஃரா ஆர்ச்சர். ஐ.பி.எல், பிக் பேஷ் லீக் என்று கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி கொண்டார். மேற்கிந்திய தீவை பூர்வீகமாக கொண்ட ஆர்ச்சர் இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக கவுண்டி போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒரு சிறந்த பௌலிங் ஆல்ரவுண்டரான இவர், 23 வயதிலேயே T20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
140kph மேல் பந்து வீசக்கூடிய ஜோப்ஃரா ஆர்ச்சர் இறுதி ஓவர்களில் யார்கர் வீசி எதிரணி ரன்கள் சேர்ப்பதை தடுப்பதில் வல்லவர். தற்போதைய விதி மாற்றத்திற்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். சென்ற ஆண்டின் பிக் பேஷ் லீக் தொடருக்கு பிறகு 7.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அனைவரும் எதிர்பார்ப்பது போல் 2019 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வாய்ப்பை ஜோப்ஃரா ஆர்ச்சர் பெறுவார் என நம்பலாம்.