உலக விளையாட்டில் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடராகும். 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அற்புதமான உலகக்கோப்பைக்கு 10 அணிகள் போட்டியிடுகின்றன.
நாம் இங்கு உலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ள 5 வீரர்களை பற்றி காண்போம்.
#5 சனத் ஜெயசூர்யா (இலங்கை)
உலகக்கோப்பை வரலாற்றில் சனத் ஜெயசூர்யா 4வது அதிக ரன்களை குவித்த வீரராக உள்ளார். 38 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 34.26 சராசரி மற்றும் 90.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1165 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் 3 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களை விளாசியுள்ளார். பௌலிங்கிலும் சிறப்பாக அசத்தியுள்ள இவர் 39.25 சராசரியுடன் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#4 வாஸீம் அக்ரம் (பாகிஸ்தான்)
உலகக்கோப்பை வரலாற்றில் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வாஸீம் அக்ரம். 1992ல் பாகிஸ்தான் உலகக்கோப்பை வென்ற போது அதில் பெரும் பங்களிப்பை அளித்தார். 38 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 23.83 சராசரி மற்றும் 35.4 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் 19.36 என்ற சுமாரன சராசரி மற்றும் 101.18 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 426 ரன்களை குவித்துள்ளார்.
#3 முத்தையா முரளிதரன் (இலங்கை)
முத்தையா முரளிதரன் உலகின் ஆல்-டைம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் முரளிதரன் 1996, 2007, 2011 ஆகிய மூன்று உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு சில குறிப்பிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் மட்டுமே மூன்று உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 40 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் பெரும்பாலும் ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே இன்னிங்ஸில் இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. உலகக்கோப்பையில் இவரது சராசரி 19.63 மற்றும் 30.3 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளார்.
#2 சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அத்துடன் இத்தொடரில் 2000ற்கும் மேலான ரன்களை விளாசிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர். 45 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 56.95 சராசரி மற்றும் 88.98 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2278 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் அடங்கும். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை குவித்த வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த சச்சின் டெண்டுல்கர் 45 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#1 ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
கிளைவ் லாய்டிற்கு பின்னர் தொடர்ச்சியாக இரு உலகக்கோப்பைகளை கைப்பற்றியுள்ள கேப்டன் ரிக்கி பாண்டிங். இவரது கேப்டன் ஷீப்பில் ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007ல் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற பெருமையுடன், அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இரண்டாவது இடத்தையும் வகிக்கிறார். 46 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 45.86 சராசரி மற்றும் 79.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1743 ரன்களை விளாசியுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு உலகக்கோப்பையில் அதிக சதங்களை குவித்தோர் பட்டியலில் 5 சதங்களை குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.