இந்திய அணி 2019 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் முன்னாள் உலக சேம்பியன் ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்திய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்று எளிதாக தொடரை கைப்பற்றியது. செடன் பூங்காவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.3 ஓவர்களை எதிர்கொண்டு வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெல்லிங்டனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என தொடரை கைப்பற்றியது. கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.
இந்திய அணி நவம்பர் 2018ல் தனது சொந்த மண்ணில் விளையாடியது. அதன்பின் 2019 பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தனது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியில் உள்ள குறைகளை களைய இந்திய அணிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாகும். இத்தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக இருப்பதால் இந்திய அணி நேரடியாக உலகக் கோப்பையில் தான் விளையாடும்.
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2019 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய தொடரில் சில முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என கூறியுள்ளார். நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடருக்கு பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி கூறியதாவது : " தற்போது முகமது ஷமிக்கு ஓய்வு தேவைப்படுகிறது- டெஸ்ட், ஒருநாள் தொடர் என நிறைய கிரிக்கெட்டில் அவர் பங்கேற்று வருகிறார். அவருடன் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கும் ஓய்வு தேவை" என கூறியுள்ளார்.
நாம் இங்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் திரும்பவுள்ள 5 வீரர்களை காண்போம்.
#5.ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் இதுவரை மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இவர் இந்திய அணியில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அத்துடன் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரகாவும் திகழ்கிறார். இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே . பிரசாந்த் கூறியதாவது : "ரிஷப் பண்ட் 2019 உலகக் கோப்பை பிளானில் உள்ளார்", கடைசி ஒரு வருடத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இவர் உலகக் கோப்பை அணியில் இனைவது சந்தேகமில்லா உண்மையாகும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெறாத ரிஷப் பண்ட் நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 72 ரன்களை விளாசியுள்ளார். இவர் கடைசியாக 2018 அக்டோபரில்தான் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் தனக்கு அளிக்கப்பட்டவுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.