2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், நாளை முதல் தொடங்கவிருக்கின்றனர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் டி20 உலகக்கோப்பை தொடரில் கவனம் செலுத்த உள்ளது, இந்திய அணி. 2019 உலகக்கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பாரா நிலையில், அரையிறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பியதால் அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இந்திய பந்து வீச்சு தரப்பு மட்டுமே உலக கோப்பை தொடரில் மிக அற்புதமாக செயல்பட்டு உள்ளது. எனவே, இந்திய ஆடவர் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் மும்முரத்தில் உள்ளது, பிசிசிஐ. சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 10 விக்கெட்களையும் டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் ஆற்றல் பெற்றுள்ளனர், இந்திய பந்துவீச்சாளர்கள். பெரும்பாலும் இந்திய அணிக்கு அதிக விக்கெட்களை கைப்பற்றி தரும் வீரர்களாக சுழற்பந்து வீச்சாளர்கள் திகழ்ந்தனர். தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் பிரதான பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரும் குறுகிய கால போட்டிகளில் சாகல் மற்றும் குல்தீப் யாதவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் அணிக்கு புதியதொரு தரமான சுழற்பந்துவீச்சாளரை தயார் செய்யும் வகையிலும் இந்திய அணி நிர்வாகம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இந்திய அணி நிர்வாகத்தால் வாய்ப்பளிக்கப்பட உள்ள தரமான 5 பந்துவீச்சாளர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.ராகுல் சாஹர்:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்ற ராகுல் சாகர் அற்புதமாக பந்து வீசி எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினார். மேலும், உள்நாட்டு தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் பந்துவீச்சாளரான இவர், தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பங்காற்றியுள்ளார். இதன் காரணமாக, இந்திய சீனியர் அணியில் இடம்பெற்று சர்வதேச களத்தில் அறிமுகம் காண உள்ளார். முதல்தர போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், 14 ஆட்டங்களில் 63 விக்கெட்களை கைப்பற்றி சிறந்த ஒரு சாதனையை வைத்து உள்ளார். எனவே,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சர்வதேச வடிவிலும் தமது வெற்றியை தொடர்வார் என நம்பலாம்.
#4.மயங்க் மார்க்கண்டே:
கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று வரும் 27 வயதான மார்க்கண்டே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகம் கண்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், 104 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர், இந்திய மண்ணில் நடைபெறும் தென் ஆப்ரிக்க தொடரில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் தனது முத்திரையை நிச்சயம் பதிப்பார். அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அ
#3.ஜலஜ் சக்ஸேனா:
தொடர்ந்து நீண்ட காலமாக இந்திய அணியில் இடம்பெற காத்திருக்கும் வீரர்களில் ஒருவர், ஜலஜ் சக்சேனா. 111 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 298 விக்கெட்களையும் 6025 ரன்களையும் குவித்துள்ளார். அவற்றில் 14 சதங்களும் அடக்கமாகும். 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது ஒரு ஆட்டத்தில் இவரது சிறந்த பந்து வீச்சாகும். 85 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடும் 96 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து இந்திய ஏ அணியின் நல்லதொரு பங்களிப்பையும் அளித்துள்ளார், சக்சேனா. இருப்பினும், சீனியர் அணியில் இடம் பிடிப்பதற்கு தவறி வருகிறார். 2019 ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சி டிராபி குரூப் சுற்றில் 7 போட்டிகளில் விளையாடிய இவர், 479 ரன்களை குவித்து கேரளா அணி சார்பில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரின் கனவான சீனியர் அணியில் களம் காண வாய்ப்பு நெருங்கியுள்ளது.
#2.சபாஷ் நதிம்:
கடந்த ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சபாஷ் நதிம் இடம் பெற்றிருந்த போதிலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்களில் முன்னிலை வகிக்கிறார். மேலும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உலக சாதனையையும் புரிந்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக களமிறங்கிய இவர், இந்திய ஏ அணிக்காக உலகம் முழுவதும் பயணித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, 107 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 411 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவிலேயே இவரது சர்வதேச பயணம் தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#1.ஸ்ரேயாஸ் கோபால்:
கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரேயாஸ் கோபால் 2019 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அது மட்டுமல்லாது, இந்த ஐபிஎல் சீசனில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 25 வயதான இவர், 56 முதல் தர போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக அமைந்து இவர் ஜொலிக்கவும் வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் இந்திய மண்ணில் நடைபெற இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவான தொடராக அது அமையும். இதனால், இவருக்கு நிச்சயம் சர்வதேச அழைப்பு விடுக்கப்படும்.