நாக்பூரில் நேற்று நடந்த (மார்ச் 5) நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி மிகவும் சிறப்பான ஓடிஐ-போட்டியாக விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணிக்கு இருந்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். விராட் கோலி அதிரடியில் 114 ரன்களும், விஜய் சங்கரின் அதிவேக பேட்டிங்கால் 41 பந்துகளில் 46 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 48.1 ஓவரில் 250 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி பதிலடி தரும் விதமாக தொடக்க பார்ட்னர் ஷிப்பில் 83 ரன்கள் வந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த பார்ட்னர் ஷிப்பை உடைத்தனர்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒரு முக்கியமான பார்ட்னர் ஷிப்பை பீட்டர் ஹான்டஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரே-வுடன் சேர்ந்து செயல்படுத்தினார். ஜாஸ்பிரிட் பூம்ராவின் மின்னல் வேக பந்துவீச்சில் 3 பந்துகளில் நாதன் குல்டர் நில், பேட் கமின்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் சங்கர் தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை நிறுபிக்கும் விதமாக முக்கிய விக்கெட்டுகளான மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
நாம் இங்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற 5 இந்திய வீரர்களை காண்போம்.
#1: விராட் கோலி

முதல் ஓவரில் ரோகித் சர்மாவின் விக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி களமிறங்கினார். தொடக்க விக்கெட்டுகள் சரிந்ததால் விராட் கோலி சற்று ஆட்டத்தை கணித்து விளையாட ஆரம்பித்தார். ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு அழுத்தம் தரும் விதமாக 55 பந்துகளில் தனது சர்வதேச 50வது ஓடிஐ அரைசதத்தை விளாசினார் விராட் கோலி.
விஜய் சங்கர் மற்றும் விராட் கோலியின் பார்ட்னர் ஷிப்பில் 84 ரன்கள் சேர்த்து இந்திய அணியை நிலை நிறுத்தினர். ஒருபுறம் இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் சரியத்தொடங்க, விராட் கோலி மட்டும் நிலைத்து விளையாடி 107 பந்துகளில் தனது 40வது சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். இறுதியாக 116 ரன்களில் பேட் கமின்ஸால், விராட் கோலி விக்கெட் வீழ்த்தப்பட்டார்.
இவரது சிறப்பான இன்னிங்ஸால் 48.2வது ஓவரில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது. சீறிய இடைவெளியில் இவர் எடுத்த பவுண்டரிகள் மற்றும் 1 ரன்கள் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. உலகின் நம்பர் 1 ஓடிஐ பேட்ஸ்மேனின் மற்றொரு சிறப்பான ஆட்டம் இந்த போட்டியில் வந்தது. இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ள நிலையில் இவரது அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2: குல்தீப் யாதவ்

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 251 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் ஃபின்சின் விக்கெட்டை வீழ்த்தினார் "சைனா மேன்" குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தார் குல்தீப் யாதவ். அலெக்ஸ் கேரே மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 47 ரன்கள் இருந்த போது அதனை நெருங்கும் விதத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார் அலெக்ஸ் கேரே. இவர் மொத்தமாக 10 ஓவர்கள் பந்துவீசி தனது பௌலிங்கில் 54 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் இந்திய அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளராகவும், அடுத்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கடும் நெருக்கடியை ஆஸ்திரேலிய அணிக்கு தனது பந்துவீச்சில் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#3 ஜாஸ்பிரிட் பும்ரா

இந்திய அணியின் நட்சத்திர பௌலர் பும்ரா ஆஸ்திரேலிய பேட்டிங்கை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் வீசிய முதல் 8 ஓவரில் வெறும் 28 ரன்கள் மட்டுமே தனது பௌலிங்கில் அளித்திருந்தார். 9வது ஓவரில் முதல் 3 பந்துகளில் நாதன் குல்டர் நில் மற்றும் பேட் கமின்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 10வது ஓவரில் 1 ரன் மட்டுமே அளித்து ஆஸ்திரேலிய அணிக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தார் பூம்ரா.
இவர் வீசிய 10 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓடிஐ கிரிக்கெட்டில் தனது பலத்தை ஆஸ்திரேலிய அணிக்கு தெரிவித்தார். பும்ராவின் அதிரடி பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது.
உலகின் நம்பர் 1 ஓடிஐ பௌலர் பும்ரா மே-30 ல் நடைபெறவிருக்கும் மாபெரும் கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பையில் கடும் நெருக்கடியை எதிரணியினருக்கு அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
#4: விஜய் சங்கர்

விஜய் சங்கர் தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது பங்களிப்பை பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் செய்து அசத்தினார். அம்பாத்தி ராயுடுவின் விக்கெட்டிற்குப் பிறகு களமிறங்கிய இவர் 42 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்களை அதிவேகமாக குவித்தார். கோலி மற்றும் விஜய் சங்கரின் 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பில் 81 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது.
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீச வந்த விஜய் சங்கர் 51 ரன்களுடன் சிறப்பாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸின் விக்கெட் மற்றும் ஆடம் ஜாம்பாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இவரது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறனால் 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவரது பெயர் கண்டிப்பாக இடம் பெறும் என்பது சந்தேகமில்லை. இவரது சிறப்பான பங்களிப்பு இந்திய அணிக்கு ஒரு புது நம்பிக்கையை அளித்துள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், அப்போட்டியில் இந்திய அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இவரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#5: ரவீந்திர ஜடேஜா

பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா, 21 ரன்களை ஆஸ்திரேலிய பௌலிங்கிற்கு எதிராக அடித்தார். இவரது ஆல்-ரவுண்டர் திறனால் ஷான் மார்ஸின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்டிங் லைன்-அப்பை சிதைத்தார். இவர் 10 ஓவர்களில் பந்துவீசி 48 ரன்களை தனது பந்துவீச்சில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹான்ட்ஸ்கோம்பை ரன் அவுட் செய்தார் ஜடேஜா. இதனால் ஆட்டம் முழுவதுமாக மாறியது. இந்திய அணியின் ஃபில்டராக இவரது பணி மிகவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. அத்துடன் ஜடேஜா ஒரு சிறப்பான பந்துவீச்சாளர் மற்றும் இக்கட்டான சமயங்களில் இவரது பேட்டிங் இந்திய அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை முழுவதும் மேம்படுத்தி வருகின்றனர். ஜடேஜா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓடிஐ தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது சிறப்பான ரன்-அவுட்டினால் இந்திய அணி வெற்றி பெற உதவியாக இருந்து தன்னை சிறந்த வீரராக நிறுபித்துள்ளார்.
3 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ள நிலையில் ஜடேஜா வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.