ஒவ்வொரு முறையும் ஆஷஸ் தொடர் நடைபெறும்போது மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். இதுபோன்ற முக்கியமான தொடரில் வீரர்கள் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்தி தங்கள் அணிகளை வெற்றி பெறச் செய்கின்றனர். இருப்பினும், சில வீரர்களின் சிறந்த ஆட்டம் பலரால் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. காரணம், அவர்களது பங்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே. இருப்பினும், சில வீரர்கள் தங்களின் பங்கினை தங்கள் அணிக்காக சிறந்த முறையில் அளித்துள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டங்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#5. மொயின் அலி ( முதலாவது டெஸ்ட் போட்டி -2015) 77 &15 , 2/71 & 3/59:
2013/2014 ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவை அளித்தது, 5-0 என ஆஸ்திரேலியாவிடம் தொடரை முழுமையாக இழந்தது. அதற்குப் பின் 2015-இல் நடந்த ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 43/3 என மோசமான தொடக்கத்தை சந்தித்தது இங்கிலாந்து அணி. இருப்பினும், ஜோ ரூட் 134 ரன்களும்,பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்னர் இருவரும் வெளியேற இங்கிலாந்து அணி 293/6 என்ற நிலையில் இருந்தது. எட்டாவது வீரராக களம் கண்ட மொயின் அலி 88 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். மொயின் அலியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி 430 ரன்கள் எடுத்தது.
பின்னர், விளையாடிய ஆஸ்திரேலிய அணி 129/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. அதன்பின், பந்துவீச வந்த மொயின் அலி, ஸ்டீவ் ஸ்மித் (33) மற்றும் கேப்டன் கிளார்க் (38) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 308 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்கள் மட்டுமே எடுத்த மொயின் அலி பந்துவீச்சில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. ஜோ ரூட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மொயின் அலியின் சிறப்பான ஆட்டம் கவனிக்கப்படாமல் போய்விட்டது.
#4.இயான் போத்தம், (முதல் டெஸ்ட் போட்டி, 1985) 3/86 & 4/107, 60 & 12:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் மோசமான பந்து வீச்சின் காரணமாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 200/2 என் என வலுவான நிலையில் இருந்தது. அதற்குப் பின், பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய அணி 331 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு முக்கிய காரணம் இயான் போத்தமே ஆவார். இவர் ஆஸ்திரேலியா அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், விளையாடிய இங்கிலாந்து அணி 533 ரன்கள் குவித்தது. மார்க் ராபின்சன் 175 ரன்கள் எடுத்தார். இயான் போத்தம் 51 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 324 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 123 ரன்கள் எனும் எளிய இலக்கை விரட்டி வெற்றி பெற்றது, 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ராபின்சன் பெற்றார். இயான் போதமின் ஆட்டம் கவனிக்கப்படாமல் போனது.
#3.ஷேன் வார்னே (மூன்றாவது டெஸ்ட் போட்டி, 1997- 6/48 & 3/63, 53):
1997ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் மூன்றாவது போட்டிக்கு முன் வரை ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் பின்தங்கி இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்டீவ் வாக் அடித்த 108 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 235 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 74/1 என சிறப்பான தொடக்கத்தை அளித்தது. ஷேன் வார்னே 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்திய வார்னே 53 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 468 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், ஷேன் வார்னே. 200 ரன்களுக்கு சுருண்டது, இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் 1-1 என சமன் செய்தது, ஆஸ்திரேலிய அணி. ஆனால், இரண்டு சதங்கள் அடித்த ஸ்டீவ் வாக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இருப்பினும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னே , ஆஸ்திரேலிய அணிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2. பிராட் ஹாடின், முதலாவது டெஸ்ட் 2013, 94 & 53:
2013/2014 ஆண்டு ஆஷஸ் தொடருக்கு முன் தொடர்ச்சியாக 3 தொடர்களை இழந்தது ஆஸ்திரேலிய அணி. 2013/2014 ஆண்டு ஆஷஸ் தொடரை நடத்திய ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 132/6 என மோசமான நிலையில் இருந்தது. பின்னர் ஜான்சன் உடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின் 94 ரன்கள் குவித்தார். ஜான்சன் மற்றும் ஹாடின் ஜோடி ஆஸ்திரேலிய அணியை 295 ரன்களுக்கு எடுத்துச் சென்றது.
ஜான்சன் மற்றும் ஹாரிஸ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 136 ரன்களுக்கு சுருண்டது. மிகப்பெரிய முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 561 ரன்கள் முன்னிலை பெற்றது. ஹாடின் வேகமாக 53 ரன்கள் குவித்தார்.
9 விக்கெட்டுகள் மற்றும் 64 ரன்கள் எடுத்த ஜான்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இருப்பினும், தொடக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பிராட் ஹாடின் மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#1. மான்டி பனேசர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் , (முதலாவது டெஸ்ட், 2009):
2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து அணி 435 ரன்கள் எடுத்த போதிலும் ஆஸ்திரேலிய அணி 674 ரன்கள் எடுத்து 239 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் 70-5 என ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணி தடுமாறியது.
மீதம் 80 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், ஆறு மணி நேரம் போராடி பால் காலிங்வுட் 74 ரன்கள் அடித்தார். அவர் அவுட் ஆனதும் ஆட்டம் முடிய இன்னும் 12 ஓவர்கள் மீதம் இருந்தன. ஆட்டத்தை டிரா செய்ய போராடியது, இங்கிலாந்து அணி. காலிங் உட் ஆட்டமிழந்த பிறகு, இடது கை சுழற்பந்து வீச்சாளரான பனேசர் களம் இறங்கினார். தோல்வியை நோக்கி சென்ற இங்கிலாந்து அணியை பனேசர் மற்றும் ஆண்டர்சன் ஜோடி மீட்டது. ஆட்டம் டிரா ஆனது. இந்த போட்டி இங்கிலாந்து அணி, 2-1 என ஆஷஸ் தொடரை வெல்ல காரணமாக அமைந்தது.