ஐபிஎல் தொடரானது கடந்த 2008ம் வருடம் தொடங்கி தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள், மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள், மற்றும் வெளிநாட்டு அதிரடி வீரர்கள் என திறமையான வீரர்களின் படையே விளையாடி வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து சாதனைகளிலும் நமது இந்திய அணியை சேர்ந்த பல திறமையான வீரர்கள் தான் முன்னிலை வகிக்கின்றனர். இந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நமது இந்திய வீரர்கள் தான் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்கள் அடித்த மொத்த ரன்களை பற்றியும் இங்கு காண்போம்.
#1) சுரேஷ் ரெய்னா
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா. இவரது சிறப்பான விளையாட்டு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 11 வருடமாக விளையாடி வருகிறார். இதில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. அதன்பின்பு 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் காலடி வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 176 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் குவித்த மொத்த ரன்கள் 4985 ஆகும். எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விரைவில் 5000 ரன்களை கடந்து விடுவார்.
#2) விராட் கோலி
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன், மற்றும் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி. விராட் கோலி என்றாலே ஐபிஎல் தொடரிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இவர் ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து பெங்களூர் அணிக்காக மட்டும்தான் விளையாடி வருகிறார். இவர் பெங்களூர் அணிக்காக 163 போட்டிகளில் விளையாடி, 4948 ரன்களை குவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இவர் 5000 ரன்களை கடந்து விடுவார்.
#3) ரோகித் சர்மா
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நமது இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலிக்கு நிகராக இவரும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். ஐபிஎல் தொடரிலும் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார் ரோகித் சர்மா. இக்கட்டான சூழ்நிலையிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் மொத்தம் 173 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் இவர் அடித்த மொத்த ரன்கள் 4493 ஆகும். இவரும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.