சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஆஸ்திரேலியா Vs தென் ஆப்பிரிக்கா ( 2007 ஆம் ஆண்டு )
ஆஸ்திரேலியா – 377/6 ( 50 ஓவர்கள் )
தென் ஆப்பிரிக்கா – 294/10 ( 48 / 50 ஓவர்கள் )
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்து வெளுத்து வாங்கிய ஹைடன், 68 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த ரிக்கி பாண்டிங், சிறப்பாக விளையாடி 91 ரன்கள் விளாசினார். பின்னர் வந்து அதிரடி காட்டிய மைக்கேல் கிளார்க் 92 ரன்கள் விளாசினார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 377 ரன்கள் குவித்தது.
378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. கிரேம் ஸ்மித் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். கிரேம் ஸ்மித் 64 ரன்களும், ஏபி டி வில்லியர்ஸ் 92 ரன்களும் விளாசினார். அடுத்து வந்த காலிஸ் நிதானமாக விளையாடி 48 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 48 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 83 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடிக்கப்பட்ட மொத்த ரன்கள் 671 ஆகும்.
#2) வெஸ்ட் இண்டீஸ் Vs ஜிம்பாப்வே ( 2015 ஆம் ஆண்டு )
வெஸ்ட் இண்டீஸ் – 372/2 ( 50 ஓவர்கள் )
ஜிம்பாப்வே – 289/10 ( 44.3 / 48 ஓவர்கள் ) D/L முறை
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் கிறிஸ் கெயில் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
போட்டியின் இறுதி வரை சிக்சர் மழை பொழிந்த கிறிஸ் கெய்ல், இரட்டை சதம் விளாசினார். கிறிஸ் கெயில், 147 பந்துகளில் 215 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடங்கும். அவருடன் இறுதிவரை ஜோடி சேர்ந்து விளையாடிய மார்லன் சாமுவேல்ஸ் 133 ரன்கள் விளாசினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 372 ரன்கள் குவித்தது.
மழை குறுக்கிட்டதால் D/ L முறைப்படி, 363 ரன்கள் ஜிம்பாப்வே அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சிக்கந்தர் ராஜா மற்றும் ஜாக்புவா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய வில்லியம்ஸ், 76 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த எர்வின், நிதானமாக விளையாடி 52 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 44 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது..